ஊழல் என்ற கரையானை ஒழிக்கவே உழைக்கிறேன்: பிரதமர் மோடி பேச்சு
ஊழல் என்ற கரையானை ஒழிக்கவே உழைக்கிறேன்: பிரதமர் மோடி பேச்சு
ADDED : ஜூலை 03, 2024 02:05 PM

புதுடில்லி: ''ஊழல் என்பது ஒரு கரையான். இந்த தேசத்தை ஊழலில் இருந்து விடுவிக்கவும், ஊழலுக்கு எதிரான வெறுப்பை சாமானியர்களின் மனதில் வளர்க்கவும் நான் முழு மனதுடன் உழைக்கிறேன்'' என ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசினார்.
ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி அளித்த பதிலுரை: பொய்யை மட்டும் பரப்பியவர்கள் அவையில் உண்மையை ஏற்க மறுக்கிறார்கள். உண்மையை எதிர்கொள்ள முடியாமல் வெளிநடப்பு செய்துள்ளார்கள். மக்கள் பிரச்னைகளை பேச அவையில் அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. ஆனால், மக்கள் பிரச்னைகளை பேச எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை என்பதால் வெளிநடப்பு செய்துள்ளனர்.
அரசியலமைப்பு
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை விவகாரங்களில் எதிர்க்கட்சிகளின் நிலை கவலைப்படும் வகையில் இருக்கிறது. மேற்குவங்கம் மாநிலம் சந்தேஷ்காலியில் ஒரு பெண்ணை தாக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்தேன். அதுபற்றி எதிர்க்கட்சியில் உள்ள சீனியர் தலைவர்களும் ஒருவார்த்தை கூட பேசவில்லை. 1975ல் அரசியலமைப்பை தகர்த்து எமர்ஜென்சியை கொண்டுவந்தது காங்கிரஸ். எமர்ஜென்சியில் இருந்து 1977 தேர்தல் தான் அரசியலமைப்பை காப்பாற்றியது. அரசியலமைப்பை பாதுகாக்க தான் மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.
காங்., மகிழ்ச்சி ஏன்
காங்கிரஸ், நாட்டை தவறாக வழிநடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பங்குச்சந்தைகள் உயர்வை கண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் ஏன் மகிழ்ச்சியாக இருந்தது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. 'ஹாட்ரிக்' தோல்வி அடைந்ததாலா? 90 இடங்களுக்கு மேல் வென்றதாலா? காங்., தலைவர் கார்கே கூட முழு உத்வேகத்துடன் இருந்ததை பார்த்தேன். தோல்விக்கு யாரோ ஒருவர் (ராகுல்) மீது பழி விழுந்துவிடக் கூடாது என்பதற்காக சுவர் போல பாதுகாத்தார்.
இதுபோன்ற சூழ்நிலையின்போது காங்கிரஸை சேர்ந்த குடும்பம், தலித்களையோ, பிற்படுத்தப்பட்டோரையோ தான் பயன்படுத்திக்கொள்ளும். லோக்சபா சபாநாயகர் தேர்தலில் கூட தோற்றுவிடுவோம் எனத் தெரிந்தும் தலித் வேட்பாளரை போட்டியிடவைத்தனர். அதேபோல், 2022ல் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலிலும் சுஷில் குமார் ஷிண்டேவை நிற்க வைத்தனர்; 2017ல் மீரா குமாரரை நிற்க வைத்தனர். எஸ்சி, எஸ்டி, ஓபிசி.,க்கு எதிரான மனநிலையிலேயே காங்கிரஸ் இருக்கிறது.
இரட்டை நிலைப்பாடு
அதே மனநிலையில் தான் ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்த், இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோரையும் கேட்க முடியாத வார்த்தைகளால் கூட காயப்படுத்தினர். காங்கிரசின் இரட்டை நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறேன். டில்லியில் ஊழல்வாதிகளை காப்பாற்றுவதற்காக காங்., ஆம்ஆத்மி இணைந்து பேரணி நடத்தின; அமலாக்கத்துறை, சிபிஐ., தவறாக வழிநடத்தப்படுவதாக கூறினர். அவர்களே, கேரளாவில் அமலாக்கத்துறை, சிபிஐ மூலமாக கேரள முதல்வரை கைது செய்யுமாறு கூறினர்.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் முதல்வராக இருந்தவருக்கு மதுபான ஊழலில் தொடர்பு இருப்பதாகவும் அவர்களை அமலாக்கத்துறை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் ஆம்ஆத்மி கூறியது. அப்போது மட்டும் அவர்களுக்கு அமலாக்கத்துறை பிரியமானவர்களாக தெரிந்துள்ளனர். ஆம்ஆத்மி ஊழல் செய்வதாகவும், மதுபான ஊழலில் ஈடுபட்டதாகவும் காங்கிரஸ், செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றம்சாட்டியது. பிறகு இருவரும் கூட்டணி வைத்துக்கொண்டுள்ளனர். இப்போது சொல்லுங்கள், ஆம்ஆத்மி மீது நீங்கள் (காங்.,) வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையா? இல்லையா?.
ஊழல்
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் செய்த பணிகளை, காங்கிரஸ் செய்திருந்தால் 20 ஆண்டுகள் எடுத்திருக்கும். என்னைப் பொறுத்தவரை, ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது தேர்தல் வெற்றி அல்லது தோல்விக்கான அளவுகோல் அல்ல. தேர்தலில் வெற்றி பெறுவதற்கோ, தோற்க வேண்டும் என்பதற்காக மட்டும் நான் ஊழலை எதிர்த்துப் போராடவில்லை. ஊழல் என்பது ஒரு கரையான் என்று நான் நம்புகிறேன். இந்த தேசத்தை ஊழலில் இருந்து விடுவிக்கவும், ஊழலுக்கு எதிரான வெறுப்பை சாமானியர்களின் மனதில் வளர்க்கவும் நான் முழு மனதுடன் உழைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.