ADDED : மார் 09, 2024 10:53 PM

'ஷாதிக் அஸீஸ்' எனும் யு டியூப் சேனலை துவங்கி, மாதம் 1.50 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் முகமது ஷாதிக் அஸீஸ்:
'ஏரோ ஸ்பேஸ்' செக்டாரில் வேலை பார்த்துக்கிட்டே, யு டியூப் சேனல் துவங்கினேன். கொரோனா நேரத்தில் எனக்கு வேலை போயிடுச்சு. அப்போது என் மனைவி நஸ்ரின் ஏழு மாத கர்ப்பிணி.
இனி எந்த கம்பெனிக்கும் வேலைக்கு போகாமல், சொந்த காலில் நிற்கணும், முழு நேர யு டியூபராகிறதுன்னு முடிவு செய்தேன். நஸ்ரின் என் மேல் வைத்திருந்த நம்பிக்கை தான், இந்த வளர்ச்சிக்கு காரணம்.
எனக்கு, 'சென்சிட்டிவ்' ஸ்கின். சருமப் பிரச்னைகள் வராமல் இருக்க கூடுதல் அக்கறை எடுத்துக்குவேன். அது சார்ந்து எனக்கு தெரிந்த விஷயங்களை வீடியோவாக பதிவிடுவேன்.
முதல் 20 வீடியோக்கள் கம்மியான வியூவ்ஸ் தான் போச்சு. திடீர்னு ஒரு நாள், 'கிரியேட்டர் ஆன் த ரெய்ஸ்'னு என்னோட வீடியோக்களை யு டியூப் நிர்வாகம் பலருக்கும் தெரியப்படுத்துச்சு.
அதாவது, சொந்தமாக கன்டென்ட் உருவாக்கி, வீடியோவை குவாலிட்டியாக வெளியிட்டு வந்தால், யு டியூப் நிர்வாகம் இப்படி சிலரை ஊக்கப்படுத்தும்.
ஒரே நாளில் என் பழைய வீடியோக்களையும் லட்சக்கணக்கானோர் பார்த்ததோடு, 'சப்ஸ்கிரைபர்ஸ்' எண்ணிக்கையும் கணிசமாக கூடுச்சு.
அழகு சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் பயன்பாடுகள் குறித்து வீடியோ பதிவிட்டு வரும் நான், இதற்காக இதுவரை, 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை வாங்கிக் குவித்திருக்கிறேன்.
இந்தத் தொகையை யு டியூப் மற்றும் அது சார்ந்த பிற வருமானம் வாயிலாக, நான்கு ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன்.
தற்போது, 22 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்டிருக்கும் நான், யு டியூபில் வீடியோக்களை பதிவிடுவதன் வாயிலாக, மாதந்தோறும் 1.50 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறேன்.
பெரும்பாலும் சொந்த செலவில் தான் பல பொருட்களை வாங்குவேன். அதில், எனக்கு பலன் கொடுத்த புராடக்ட்ஸ் பற்றி மட்டும் தான் வீடியோஸ் செய்கிறேன். அடுத்து, பெய்டு கொலாபரேஷன்.
இந்த முறையில் சில நிறுவனங்கள், அவங்களோட பொருளை எனக்கு அனுப்பி, அதை பற்றி, 'ரெவ்யூ' செய்து வீடியோ வெளியிடச் சொல்வாங்க; அப்படி வரும் பொருட்களில், தரமற்ற பொருட்களுக்கு எவ்வளவு பணம் கிடைத்தாலும் வீடியோஸ் செய்ய மாட்டேன்.
நான் சிபாரிசு செய்த பொருட்கள் பற்றியும், அவற்றை வாங்குவதற்கான விபரங்கள் பற்றியும் வீடியோவுக்கு கீழ், 'லிங்க்' பகிர்வேன். இது வாயிலாக யாராவது அந்தப் பொருட்களை வாங்கினால், எனக்கு குறிப்பிட்ட தொகை கிடைக்கும். இது தான் அபிலியேட் மார்க்கெட்டிங்.
தவறான பொருளை சிபாரிசு பண்ணிட்டா, என் பெயரும், சேனலும் அடிவாங்கிடும். அதனால், எச்சரிக்கையுடன் தான் ஒவ்வொரு வீடியோவையும் பதிவிடுவேன்.
************************
பனங்கிழங்கு உற்பத்தி15,000 ரூபாய் செலவு;ரூ.1.40 லட்சம் லாபம்!
பனங்கிழங்கு உற்பத்தியில் ஈடுபட்டு வரும், துாத்துக்குடி மாவட்டம், காயாமொழி பகுதியைச் சேர்ந்த விவசாயி சக்திகுமார்:துாத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்துார், உடன்குடி, சாத்தான்குளம், காயாமொழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள, செம்மண் நிலங்களில் பனங்கிழங்கு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
ஜனவரி முதல் மார்ச் வரையிலுமான பனங்கிழங்கு சீசனின் போது, இந்த பகுதிகளில் வியாபாரம் களைகட்டும். இங்கு விளைவிக்கப்படும் பனங்கிழங்குகள், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் வினியோகம் செய்யப்படுகின்றன.
அதிக விற்பனை வாய்ப்பும், நியாயமான விலையும் கிடைப்பதால், பனங்கிழங்கு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கணிசமான லாபம் உத்தரவாதமாக கிடைக்கிறது.
எங்கள் குடும்பத்துக்கு, 7 ஏக்கர் நிலம் இருக்கு. 2008 முதல் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். 3 ஏக்கரில் பப்பாளியும், 3.90 ஏக்கரில் கற்பூரவள்ளி வாழையும்
சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன்.
மீதி 10 சென்ட் பரப்பில் மட்டும் பார்கள் அமைத்து, பனங்கிழங்கு சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன்.இது, செம்மண் நிலம்; இதில் விளையக்கூடிய கிழங்குக்கு தனிச்சுவை உண்டு.
இதனால் தான் எங்கள் பகுதியில் உற்பத்தி செய்யப்படுற பனங்கிழங்குகளை, மக்கள் மிகவும் விரும்பி வாங்குகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக, கிழங்கு உற்பத்தியில் ஈடு
பட்டுட்டு இருக்கேன்.
கடந்தாண்டு, 12,000 பனம்பழங்கள் சேகரித்தேன். அந்தப் பழங்களில் இருந்து, 36,000 விதைகள் எடுத்து விதைப்பு செய்தேன். எல்லாமே நல்லா முளைச்சு
வந்தன. விதைப்பு செய்ததில் இருந்து, 90 - 110 நாட்களில் அறுவடைக்கு வந்தன. ஒரு கிழங்கு, 5 ரூபாய் என விற்பனை செய்ததன் வாயிலாக, 1.55 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. 15,000 ரூபாய் செலவு போக, மீதி, 1.40 லட்சம் ரூபாய் லாபமாகக் கிடைத்தது.
இந்தப் பகுதியில் உள்ள பெண்கள், தங்களோட கை செலவுகளுக்கு வீட்டில் உள்ள ஆண்களை எதிர்பார்க்காமல், வீட்டின் பின் பகுதியில் 500 விதைகள், 1,000 விதைகள் என, குறைவான எண்ணிக்கையில் பனை விதைகளை விதைப்பு செய்து, கிழங்குகள் உற்பத்தி செய்து, வீட்டு வாசலிலேயே விற்பனை
செய்து வருமானம் பார்க்கின்றனர்.தொடர்புக்கு: 94443 36353.

