தாவூத்தின் கொலை மிரட்டலால் நாட்டைவிட்டு தப்பியோடினேன் : லலித் மோடி
தாவூத்தின் கொலை மிரட்டலால் நாட்டைவிட்டு தப்பியோடினேன் : லலித் மோடி
ADDED : நவ 25, 2024 07:31 PM

லண்டன்: இந்தியாவை விட்டு நான் தப்பியோடவில்லை. நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கொலை மிரட்டல் காரணமாகவே நாட்டை விட்டு வெளியேறினேன் என ஐ.பி.எல்., கிரிக்கெட் முன்னாள் கமிஷனர் லலித் மோடி தெரிவித்தார்.
ஐ.பி.எல்., எனப்படும் இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை துவக்கி, அந்த அமைப்பின் கமிஷனராக இருந்தவர் தொழிலதிபர் லலித் மோடி, 60. இந்த போட்டிகளை நடத்துவதில் ரூ.460 கோடி வரை ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கிரிக்கெட் சம்மேளனத்தில் இருந்து நீக்கப்பட்டார். இவர் மீது குற்றப் பரிவு போலீசார் வழக்கு தொடர்ந்து கைது செய்ய இருந்த நேரத்தில் 2010-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பியோடினார். அன்று முதல் லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
லலித் மோடி இன்று அளித்த பேட்டி ஒன்றில் கூறியது,
என் மீது எந்த நீதிமன்றத்திலும் வழக்குகள் இல்லை. சட்ட பிரச்னையும். இருப்பினும் நான் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டேன். காரணம் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் ‛மேட்ச் பிக்ஸ்' செய்ய சொல்லி நெருக்கடி கொடுத்தார். விளையாட்டில் நேர்மை மிகவும் முக்கியம் என்பதால் மறுத்தேன். இதனால் எனக்கு பல வழிகளில் கொலை மிரட்டல்கள் வந்ததது.
அவரது ‛ஹிட்' லிஸ்டில் என் பெயர் இருப்பதாக எனக்கு பாதுகாப்பு வழங்கிய மூத்த போலீஸ் அதிகாரிகள் எச்சரித்தனர். இதன் காரணமாக தான் நான் இந்தியா விட்டு வெளியேறினேன். இவ்வாறு கூறினார்.