ADDED : மார் 08, 2024 02:17 AM

சிக்கமகளூரு: “லோக்சபா தேர்தலுக்கு பின், நான் பேச நிறைய விஷயங்கள் உள்ளன,” என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரவி கூறினார்.
சிக்கமகளூரில் நேற்று அவர் அளித்த பேட்டியில், ''நாட்டின் நலனுக்காக மூன்றாவது முறையாக, மோடி பிரதமராக வேண்டும். கட்சி, நாட்டின் நலனுக்காக பல விஷயங்களை சகித்து வருகிறேன். எல்லாவற்றையும் ரொம்ப நாள், மனதில் வைக்க முடியாது.
''லோக்சபா தேர்தலுக்குப் பின்னர், நான் பேச நிறைய விஷயங்கள் உள்ளன. எல்லாவற்றையும் வெளிப்படுத்துவேன். மாநிலத்தில் 28 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெற வேண்டும். அதற்காக அணிலாக மாறி வேலை செய்வேன்,'' என்றார்.
பா.ஜ., தேசிய பொதுச் செயலராக இருந்த ரவி, பா.ஜ., மாநிலத் தலைவர் பதவி எதிர்பார்த்தார். மேலிட தலைவர்களும் அனுமதி அளித்து, பொதுச் செயலர் பதவியில் இருந்து விடுவித்தனர். ஆனால் கடைசி நேரத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தன் மகன் விஜயேந்திராவுக்கு பதவி வாங்கிக் கொடுத்து விட்டார்.
வரும் லோக்சபா தேர்தலில் உடுப்பி - சிக்கமகளூரு தொகுதி 'சீட்' ரவி எதிர்பார்த்தார். ஆனால், அதிலும் எடியூரப்பா தலையீடு உள்ளது.
மத்திய விவசாய இணை அமைச்சர் ஷோபாவுக்கு 'சீட்' என, எடியூரப்பா கூறி இருப்பது, ரவிக்கு கோபத்தை கிளப்பி உள்ளது. இதை எல்லாம் மனதில் வைத்து, ரவி பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

