அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு; கவர்னரை சந்தித்த பிறகு ஏக்நாத் ஷிண்டேவிடம் பட்னவிஸ் சொன்ன வார்த்தை
அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு; கவர்னரை சந்தித்த பிறகு ஏக்நாத் ஷிண்டேவிடம் பட்னவிஸ் சொன்ன வார்த்தை
UPDATED : டிச 04, 2024 07:02 PM
ADDED : டிச 04, 2024 06:58 PM

மும்பை: மஹாராஷ்டிராவில் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்தில் ஏக்நாத் ஷிண்டேவும் பங்கெடுப்பார் என்று நம்புவதாக நாளை முதல்வராக பொறுப்பேற்க உள்ள தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.
மும்பையில் இன்று நடந்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் மஹா., சட்டசபை குழு தலைவராக, தேவேந்திர பட்னவிஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, தேசியவாத காங்., தலைவர் அஜித்பவார், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருடன் சென்று கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து பட்னவிஸ் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
பின்னர், 3 பேரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, பட்னவிஸ் பேசியதாவது;- என்னை முதல்வராக பதவியேற்குமாறு வேண்டுகோள் விடுத்த, சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் அஜித் பவாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சியமைக்க வருமாறு கவர்னர் எனக்கு அழைப்பு விடுத்தார். புதிய அரசாங்கத்தில் ஏக்நாத் ஷிண்டேவும் அங்கம் வகிக்க வேண்டும் என்று அவருக்கு நான் கோரிக்கை விடுத்துள்ளேன். இதனை அவர் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன், எனக் கூறினார்.
தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், 'இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு முதல்வராக என்னுடைய பெயரை பட்னவிஸ் பரிந்துரைத்தார். தற்போது, அவருடைய பெயரை நான் பரிந்துரைக்கிறேன்,' என்றார். அப்போது, துணை முதல்வராக நாளை பதவியேற்பீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ' நாளை மாலை உங்களுக்கு தெரியும்,' எனக் கூறினார்.
அஜித் பவார் பேசுகையில்,' அரசுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் முடிவு செய்துள்ளோம். 5 ஆண்டுகள் நிலையான ஆட்சி நடக்கும். எங்களது கட்சியில் இருந்து எந்த எம்.எல்.ஏ.,வும் விலகவில்லை. நாளை நான் பதவியேற்க இருக்கிறேன். ஷிண்டேவின் நிலைப்பாடு குறித்து இன்று மாலை அறிவிப்பார்,' எனக் கூறினார்.
நாளை (டிச.,05) மாலை 5 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. ஒரு வாரமாக நீடித்த இழுபறிக்கு முடிவு வந்தது. அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.