ADDED : செப் 28, 2025 11:39 PM

பரேலி: உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் பேரணியில் வன்முறை வெடித்தது தொடர்பாக மதகுரு கைது செய்யப்பட்ட நிலையில், வதந்திகளை தவிர்க்க இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் கான்பூரை அடுத்த ராவத்பூரில், கடந்த 4ம் தேதி நடந்த மீலாடி நபி விழாவில், 'ஐ லவ் முகமது' என போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதற்கு ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, போஸ்டர் ஒட்டியது தொடர்பாக 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பரேலியில் முஸ்லிம்கள் ஒன்று கூடி, கடந்த 25ம் தேதி போராட்டம் நடத்தினர்.
ஊர்வலமாக சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதல் வன்முறையில் முடிந்தது. வாகனங்கள், கடைகள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, வன்முறையை துாண்டி விட்டதாக, உள்ளூர் மதகுருவும், இத்திஹாத் - இ - மில்லத் கவுன்சிலின் தலைவருமான மவுலானா தவ்கீர் ரசா கான் உட்பட எட்டு பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கைது நடவடிக்கையால், தவ்கீர் ரசா கானின் வீடு உள்ள பரேலியில் பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து, அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தை தொடர முஸ்லிம்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து சமூக வளைதளங்களில் வதந்தி பரவுவதை தடுக்க, பரேலியில், அடுத்த 48 மணி நேரத்துக்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இது தேவையற்ற வதந்தி பரவலைத் தடுக்கும் என போலீசார் தெரிவித்தனர்.