சாவை கண் முன் பார்த்தேன் லட்சுமி ஹெப்பால்கர் உருக்கம்
சாவை கண் முன் பார்த்தேன் லட்சுமி ஹெப்பால்கர் உருக்கம்
ADDED : ஜன 26, 2025 11:00 PM

பெலகாவி: கார் விபத்தில் முதுகு தண்டில் காயம் அடைந்த அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சாவை கண்முன் கண்டு உயிர் பிழைத்தேன் என்று உருக்கமாக கூறினார்.
கர்நாடக பெண்கள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர். இவர் பயணம் செய்த கார் கடந்த 14ம் தேதி கிட்டூரில் விபத்தில் சிக்கியது. அமைச்சர் லட்சுமியின் முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டது. பெலகாவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, 12 நாட்கள் சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது அவர் அளித்த பேட்டி:
இந்த விபத்து துரதிர்ஷ்டவசமான சம்பவம். சாவை கண்ணில் கண்டு தற்போது உயிர் பிழைத்து உள்ளேன்.
இதற்கெல்லாம் மூத்தவர்கள், பெற்றோர்களின் ஆசிர்வாதம் தான் காரணம். மடாதிபதிகள் என்னை மருத்துவமனையில் சந்தித்து விரைவில் குணமடைய வேண்டும் என்று ஆசி வழங்கினர். இது எனக்கு தைரியத்தை கொடுத்தது.
முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், மேலிட பொறுப்பாளர் மருத்துவமனைக்கு நேரில் வந்து எனது உடல்நலம் குறித்து விசாரித்தனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ரவி பாட்டீல், அவரது குழுவினருக்கும் நன்றி.
நான் குணமடைய வேண்டும் என்று கோவிலில் பூஜை செய்த எனது தொகுதி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் நான் மீண்டும் பிறந்ததைப் போன்று உணர்கிறேன்.
மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்கும்படி டாக்டர் என்னிடம் கூறினார். ஆனால், அமைச்சரான எனக்கு பொறுப்பு அதிகமாக உள்ளது. மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. எனது துறைக்கு அறிவிக்க வேண்டிய திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தினமும் ஆலோசனை நடத்துவேன்.
விபத்தில் சிக்கிய காரில் பணம் இருந்ததாக மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி கூறியுள்ளார். அவருக்கு இதயமே இல்லை. அவரது குற்றச்சாட்டுக்கு நான் பதிலளிக்க மாட்டேன். சங்கராந்தி அன்று மலபிரபா நதிக்கரையில் உள்ள புண்ணிய தலங்கள், வீரபத்ரேஸ்வரர் கோவிலுக்கு செல்ல வேண்டி இருந்தது. இதனால் பெங்களூரில் இருந்து இரவோடு இரவாக கிளம்பினோம். அவசரமாக புறப்பட்டதால் எஸ்கார்ட் வேண்டும் என்று கேட்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

