நான் திரும்பி வருவேன்; வங்கதேச அரசுக்கு ஷேக் ஹசீனா சவால்!
நான் திரும்பி வருவேன்; வங்கதேச அரசுக்கு ஷேக் ஹசீனா சவால்!
ADDED : பிப் 18, 2025 06:54 AM

புதுடில்லி: 'நான் வங்கதேசத்துக்கு மீண்டும் வருவேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வேன்' என அந்த நாட்டு இடைக்கால அரசுக்கு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சவால் விடுத்துள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு, மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இதனால் வங்க தேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சியை கைப்பற்றியது. இந்தியாவில் தங்கி உள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என வங்க தேச அரசு கோரிக்கை விடுத்து இருந்தது.
தற்போது, இடைக்கால அரசை, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடுமையாக சாடியுள்ளார். நிகழ்ச்சியில் ஒன்றில் அவர் பேசியதாவது: நான் திரும்பி வருவேன். அதனால் தான் அல்லா என்னை உயிருடன் வைத்து இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வேன். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் நான் உதவி செய்வேன்.
போராட்டத்தின் போது மக்களை கொன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெறுவதை உறுதி செய்வேன். எனது ஆட்சி காலத்தில் போலீசார் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தனர். அவர்கள் நிதானத்தை கடைபிடித்தனர். ஆறு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது, ஆனால் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை தொடர்கிறது.
தகுதி இல்லை
முகமது யூனுஸ் ஆட்சி செய்ய தகுதியற்றவர். அவரால் நாட்டை வழி நடத்த முடியவில்லை. பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது. சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது. மாணவர்கள் தொடங்கிய கலவரம் போலீசார், எனது கட்சியினர் கொல்ல வழிவகுத்தது. கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு யூனுஸின் ஆட்சியின் கீழ் நீதி கிடைக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

