'அங்கன்வாடியில் பிரியாணி வேணும்': சிறுவன் ஆசைக்கு செவிசாய்த்த அமைச்சர்
'அங்கன்வாடியில் பிரியாணி வேணும்': சிறுவன் ஆசைக்கு செவிசாய்த்த அமைச்சர்
ADDED : பிப் 05, 2025 04:38 AM

திருவனந்தபுரம்: 'வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்' என்பதை கண் எதிரே நிகழ்த்திக் காட்டி உள்ளான், கேரளாவைச் சேர்ந்த ஷங்கு என்ற சிறுவன்.
திருவனந்தபுரத்தில் உள்ள அங்கன்வாடியில் படிக்கும் இந்த சிறுவன் பேசிய, 'வீடியோ' ஒன்றை அவனது தாயார் சமூக வலைதளத்தில் சமீபத்தில் வெளியிட்டார். அதில், 'அங்கன்வாடியில் உப்புமாவுக்கு பதில் பிரியாணியும், வறுத்த கோழியும் தர வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்துள்ளான்.
பிரியாணி என்பதை உச்சரிக்க தெரியாமல், 'பிர்ணானி' என உச்சரித்துள்ள அந்த சிறுவனின் வெள்ளந்தியான பேச்சு, பார்ப்போரை நெகிழ்ச்சிஅடைய செய்துள்ளது. சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்கும்படி, சமூக வலைதள பயனர்கள் பலர் கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
சிறுவனின் வீடியோ, மாநில சுகாதார துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பார்வைக்கு சென்றது. அந்த வீடியோவை வெகுவாக ரசித்த அமைச்சர் கூறுகையில், “குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்க வேண்டும் என்பதே அங்கன்வாடியில் உணவு வழங்குவதன் நோக்கம்.
''ஷங்குவின் கோரிக்கையை ஏற்று, அங்கன்வாடி உணவு பட்டியலை மறு ஆய்வு செய்து, அதில் பிரியாணியை சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என, உறுதிஅளித்துள்ளார். ஷங்குவின் வீடியோ வெளியானதில் இருந்து, சிறுவனை பிரியாணி விருந்துக்கு அழைத்து வரும்படி கேரளாவில் அழைப்புகள் குவிவதாக அவனது தாயார் தெரிவித்துள்ளார்.