ஹிந்தி கற்க விரும்பியதால் கேலிக்கு ஆளானேன்: நிர்மலா சீதாராமன் வேதனை
ஹிந்தி கற்க விரும்பியதால் கேலிக்கு ஆளானேன்: நிர்மலா சீதாராமன் வேதனை
UPDATED : டிச 03, 2024 10:27 PM
ADDED : டிச 03, 2024 10:23 PM

புதுடில்லி: '' சிறு வயதில் ஹிந்தி கற்க விரும்பியதால், கேலிக்கு ஆளானேன்,'' என லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
லோக்சபாவில், வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவிற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது அவரது ஹிந்திப் பேச்சில் குறை உள்ளதாக ' இண்டியா' கூட்டணி கட்சிகள் சுட்டிக்காட்டின.
இதற்கு நிர்மலா சீதாராமன் அளித்த பதில்: என்னை ஹிந்தி படிக்க விடாமல் செய்ததற்கு தி.மு.க.,வினர் மீது தான் புகார் கூற வேண்டும். சிறுவயதில் நான் ஹிந்தி கற்க விரும்பியதால் சிறுவயதில் கேலி செய்யப்பட்டேன். ஹிந்தி அமல்படுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா?நான் ஹிந்தி கற்றால் என்ன தவறு?
ஐக்கிய நாடுகள் பொது சபைக்கு தமிழை கொண்டு சென்ற பிரதமர் யார் எனக்கூற முடியுமா. மோடி மட்டுமே அதனை செய்தார்.தமிழை தொடர்ச்சியாக மேற்கோள் காட்டியவர் யார் எனக்கூற முடியுமா? தமிழ் மொழியை அவர் மதிக்கிறார். தி.மு.க., கூட்டணி வைத்துள்ள கட்சியை சேர்ந்த ஒரு பிரதமர் தமிழை பற்றி பேசினார் என சொல்ல முடியுமா? ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மொழி இருக்க வேண்டும் என்பதை பிரதமர் ஆதரிக்கிறார் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.