ஆந்திரா உள்துறை இலாகாவையும் எடுத்து கொள்வேன்: பவன் கல்யாண் அதிரடியால் பரபரப்பு
ஆந்திரா உள்துறை இலாகாவையும் எடுத்து கொள்வேன்: பவன் கல்யாண் அதிரடியால் பரபரப்பு
UPDATED : நவ 04, 2024 10:45 PM
ADDED : நவ 04, 2024 10:40 PM

விஜயவாடா: ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் அனிதா சரியாக செயல்படாவிட்டால், அந்த பொறுப்பை நானே ஏற்க வேண்டிய நிலை ஏற்படும் என அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார். கூட்டணி கட்சியையே அவர் விமர்சித்து உள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக வகித்து வருகிறார். கூட்டணி கட்சியான ஜனசேனா கட்சியின் பவன் கல்யாண் துணை முதல்வராக உள்ளார். அங்கு அதிரடி அரசியலுக்கு பெயர் போன பவன் கல்யாண், தற்போது கூட்டணி கட்சி தலைவரையே விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், நேற்று 3 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
இந்த விவகாரம் தனது தொகுதியான பிதாபுரம் பகுதியில் நடந்த கூட்டத்தில் பவன் கல்யாண் பேசியதாவது: ஆந்திராவில் அமைதியும், பாதுகாப்பும் குறிப்பிடத்தக்க அளவில் மோசமடைந்துள்ளது. உ.பி.,யில் யோகி ஆதித்யநாத் கையாள்வதுபோல், இங்கும் சட்டம் ஒழுங்கை கையாள வேண்டும். நான் உள்துறை அமைச்சர் அனிதாவிற்கு சொல்ல வேண்டியது இதுதான். நீங்கள் உள்துறை அமைச்சர். நான் பஞ்சாயத்து ராஜ், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர். உங்கள் கடமையை சரியாக கையாள வேண்டும். அல்லது உள்துறை அமைச்சர் பொறுப்பையும் நான் ஏற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
நீங்கள் யோகி ஆதித்யநாத் போல் செயல்பட வேண்டும். அரசியல் தலைவர்களும் , எம்.எல்.ஏ.,க்களும் ஓட்டு கேட்க மட்டும் வரவில்லை. உங்களுக்கும் பொறுப்பு உள்ளது. அனைவரும் இதை சிந்தித்து பார்க்க வேண்டும். நான் உள்துறை அமைச்சர் பொறுப்பை கேட்கவோ அல்லது எடுக்கவோ முடியாது என்பது அல்ல. நான் செய்தால், மக்களுக்கு விஷயங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். நாம் யோகி ஆதித்யநாத் போல் இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் மாற மாட்டார்கள். எனவே நீங்கள் மாறுவீர்களா இல்லையா என்பதை முடிவு செய்யுங்கள். இவ்வாறு பவன் கல்யாண் பேசினார்.
பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி அமைச்சரையே விமர்சனம் செய்ததால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு உள்ளதா என்ற கேள்வி அம்மாநில அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.