யமுனையை லண்டனின் தேம்ஸ் நதியைப் போல மாற்றுவேன்: அமித் ஷா உறுதி
யமுனையை லண்டனின் தேம்ஸ் நதியைப் போல மாற்றுவேன்: அமித் ஷா உறுதி
UPDATED : ஜன 25, 2025 06:07 PM
ADDED : ஜன 25, 2025 05:32 PM

புதுடில்லி:'ஏழு ஆண்டுகளில் யமுனையை சுத்தம் செய்து லண்டனின் தேம்ஸ் நதியைப் போல மாற்றுவேன்,' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்தார்.
டில்லி சட்டசபை தேர்தல் பிப்., 5 ம் தேதி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை பிப்.,8 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் இன்று தேர்தல் அறிக்கையின் மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதியை பா.ஜ., வெளியிட்டது. இதனை வெளியிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: டில்லியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு மற்றும் ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும் , குஜராத்தில் உள்ள சபர்மதி நதிக்கரையைப் போலவே புதிய யமுனா நதிக்கரையை உருவாக்குவோம் என்றார்.
டில்லியில் அமித் ஷா செய்தியாளர்களிடம் பேசியதாவது:
50,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க உறுதியளிக்கிறோம். டில்லி மக்களுக்கு 20 லட்சம் சுயவேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.
டில்லியின் 1,700 அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வாங்குதல், விற்றல் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட முழு உரிமைகளையும் பாஜ வழங்கும்.ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிப்போம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அதை அங்கீகரிப்போம்.
ஆம் ஆத்மி ஆட்சியின் போது சீல் வைக்கப்பட்ட 13,000 கடைகளைத் திறப்பதற்கும் நாங்கள் பாடுபடுவோம். 13,000 பேருந்துகளையும் இ-பஸ்களாக மாற்றுவோம்.
ஏழு ஆண்டுகளில் யமுனையை சுத்தம் செய்து லண்டனின் தேம்ஸ் நதியைப் போல மாற்றுவேன். டில்லி மக்கள் முன்னிலையில் யமுனையில் நீராடுவேன். அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி மக்கள் உங்கள் உலகப் புகழ்பெற்ற யமுனையில் நீராடுவதற்காகக் காத்திருக்கிறார்கள். யமுனையில் இல்லையென்றால், அவர் மகா கும்பமேளாவுக்குச் சென்று அங்கு நீராடலாம், தனது பாவங்களைப் போக்கிக் கொள்ளலாம். இவ்வாறு அமித் ஷா பேசினார்.