ரவி குறித்து பிரதமரிடம் புகார் செய்வேன்! அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் முரண்டு
ரவி குறித்து பிரதமரிடம் புகார் செய்வேன்! அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் முரண்டு
ADDED : டிச 24, 2024 06:32 AM

பெலகாவி: ''என்னை ஆபாசமாக பேசிய பா.ஜ., - எம்.எல்.சி., ரவி மீது நடவடிக்கை எடுக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடியிடம் புகார் அளிப்பேன்,'' என, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கூறி உள்ளார்.
பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மேல்சபையில் 19ம் தேதி நடந்த போராட்டத்தின்போது, பா.ஜ., - எம்.எல்.சி., ரவி என்னை ஆபாசமாக பேசியதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளேன். அவரை போன்று 100 ரவிகளை எதிர்கொள்ள நான் தயார்.
அவர் ஏதோ தியாகம் செய்த போல, மலர்களை துாவி பா.ஜ., தலைவர்கள் கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு வெட்கம், மானம் இல்லையா? ரவி என்னை மட்டும் அவமதிக்கவில்லை. பெண் குலத்தையே அவமதித்து இருக்கிறார்.
என்ன பேசினோம் என்று அவரது மனசாட்சிக்கு தெரியும். கடவுள் முன் நின்றால் எல்லாம் சரியாகி விடுமா? ரவி மீது நடவடிக்கை எடுக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவேன். வாய்ப்பு கிடைத்தால் அவரை சந்தித்து, எடுத்து சொல்லி நியாயம் கேட்பேன்.
ரவியை இரவு முழுவதும் அலைக்கழித்தனர் என்று போலீசார் மீது, பா.ஜ., தலைவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கானாபுரா போலீஸ் நிலையத்தில், அவர்கள் என்ன செய்தனர் என்று ஞாபகம் இல்லையா?
ரவியை என்கவுன்டர் செய்ய சதி நடந்ததாக, பா.ஜ.,வினர் வாய் கூசாமல் பேசுகின்றனர். தன் தலையில் அவர் பெரிய கட்டு போட்டுள்ளார்.
எத்தனை தையல் போட்டு இருக்கிறார்? அரசியலுக்காக எதை வேண்டும் என்றாலும் பேசலாமா? தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அவர் மன்னிப்பு கேட்டு இருந்தாலும் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
லட்சுமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரவி அளித்த பேட்டி:
பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், எம்.எல்.சி., சன்னராஜ் ஹட்டிகோளி ஆகியோர் என்னை மிரட்டினர். லட்சுமி அளித்த புகாரில் என் மீது நடவடிக்கை எடுத்தனர்.
நான் அளித்த புகாரில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மேல்சபையில் வைத்து என் அம்மா, மனைவி பற்றி லட்சுமி பேசினார்.
என் மீது தாக்குதுல் நடத்தபட்டதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. மிரட்டும் அரசியலை ஜனநாயகம் அனுமதிக்காது. போலீஸ் துறையின் மனிதாபிமானமற்ற நடவடிக்கை குறித்தும், மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டியிடமும், மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் ரவியை தாக்க முயன்றதாக, அடையாளம் தெரியாத, பத்து பேர் மீது ஹிரேபாகேவாடி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். இதை பெலகாவி போலீஸ் கமிஷனர் யடா மார்ட்டின் உறுதி செய்தார்.