ADDED : ஜன 19, 2025 07:08 AM

விஜயபுரா: “ரமேஷ் ஜார்கிஹோளி, பா.ஜ.,வுக்கு வந்திருக்காவிட்டால், எடியூரப்பாவால் முதல்வராகி இருக்க முடியுமா?” என பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கேள்வி எழுப்பினார்.
விஜயபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ், ம.ஜ.த.,வின் 17 எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ.,வுக்கு வந்திருக்காவிட்டால், விஜயேந்திராவின் தந்தை எடியூரப்பா, முதல்வர் பதவியில் அமர்ந்திருக்க முடியுமா; விஜயேந்திராவால் பணம் சம்பாதித்திருக்க முடியுமா; தன் தந்தை முதல்வராக இருந்தபோது, விஜயேந்திரா எவ்வளவு பணம் சம்பாதித்தார் என்பது, உலகத்துக்கே தெரியும்.
ரமேஷ் ஜார்கிஹோளியை ஓரம் கட்டுவதில், விஜயேந்திராவின் பங்களிப்பு உள்ளது என்பதும் எனக்கு நன்றாக தெரியும்.
யார் போட்டி
மாநில பா.ஜ., தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தால், எங்கள் அணியில் இருந்து ஒருவர், வேட்பாளராக போட்டியிடுவார். இதுகுறித்து, நாங்கள் ஏற்கனவே முடிவு செய்துள்ளோம். நான் நிற்பதா அல்லது வேறு ஒருவரை களமிறக்குவதா என்பதை, பின்னர் முடிவு செய்வோம்.
களங்கமான நபர்களிடம் இருந்து, பா.ஜ.,வை விலக்கி வைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். தனக்கு ஓட்டுப் போடும்படி, மாவட்ட தலைவர்களுக்கு விஜயேந்திரா நெருக்கடி தரக்கூடாது. ஆனால் அவர் நெருக்கடி கொடுத்து வருகிறார். இதை மேலிடம் கவனிக்க வேண்டும். தேர்தல் விஷயத்தில் யாரும் தலையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தொண்டர்கள் பாதயாத்திரை நடத்தி, உண்ணாவிரதம் இருந்து கட்சியை பலப்படுத்தினர். இவர்களால் பா.ஜ.,வால் ஆட்சிக்கு வர முடிந்தது. ஒருவர் மட்டுமே சைக்கிள் மிதித்ததால், கட்சி ஆட்சிக்கு வரவில்லை.
நாங்கள் பா.ஜ.,வில் பதவிகளை அனுபவித்துள்ளோம். கட்சிக்காக உழைத்த சிலருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை.
விஜயேந்திராவின் தந்தை, நான்கு முறை முதல்வரானார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். மாநிலத் தலைவராக பதவி வகித்தார். எம்.பி.,யானார். என்னை கட்சியில் இருந்து நீக்கினர். அதன்பின் மீண்டும் சேர்ந்தேன்.
கையெழுத்து
விஜயேந்திரா கலெக்ஷன் மாஸ்டர். மாநிலத் தலைவராக கட்சிக்கு எதையும் செய்யவில்லை. எடியூரப்பா சிறைக்கு செல்ல காரணமாக இருந்தவரே, இப்போது மாநிலத் தலைவராக பதவி வகிக்கிறார். தந்தையை சிறைக்கு அனுப்பிய மகன், எடியூரப்பா பெயரில் எந்தெந்த விஷயத்துக்கு கையெழுத்து போட்டார் என்பது தெரியவில்லை.
என்னிடம் கட்சியின் தலைமை பொறுப்பு இருந்தால், 135 தொகுதிகளில் கட்சியை வெற்றி பெற வைப்பேன். அப்படி வெற்றி பெற வைக்காவிட்டால், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.