ADDED : ஜன 24, 2024 10:46 AM

கவுஹாத்தி: ‛‛என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள். நான் பயப்பட மாட்டேன்'' என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
லோக்சபா தேர்தலையொட்டி, மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இரண்டாம் கட்ட 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை'யை காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடந்த ஜன.,14ம் தேதி மணிப்பூரில் துவக்கினார்.
இந்நிலையில் அசாம் மாநிலம் பார்பேட்டா பகுதியில் 11வது நாள் யாத்திரையை காங்கிரஸ் எம்.பி ராகுல் மேற்கொண்டார். பின்னர் ராகுல் பேசியதாவது: நாட்டில் ஊழல் நிறைந்த முதல்வர் என்றால் அது அசாம் முதல்வர் தான்.
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இயக்குகிறார். அமித் ஷாவுக்கு எதிராக எதையும் சொல்லத் துணிந்தால், அவர் தூக்கி எறியப்படுவார். ராகுலை பயமுறுத்தலாம் என்ற எண்ணம் ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.
என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள். நான் பயப்பட மாட்டேன். ஜாதி, மதம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்த பா.ஜ., முயற்சி செய்கிறது. பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் மணிப்பூரை எரித்துவிட்டது. ஆனால் நாட்டின் பிரதமர் மணிப்பூருக்கு இதுநாள் வரை செல்லவில்லை.
நமது பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை மணிப்பூரில் துவங்கி உள்ளது. மஹாராஷ்டிரா வரை செல்லும். வன்முறையும் வெறுப்பும் யாருக்கும் பயனளிக்கப் போவதில்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.

