ஹிந்து, முஸ்லிம் என அரசியல் செய்ய மாட்டேன்: பிரதமர் மோடி பேட்டி
ஹிந்து, முஸ்லிம் என அரசியல் செய்ய மாட்டேன்: பிரதமர் மோடி பேட்டி
UPDATED : மே 15, 2024 02:07 PM
ADDED : மே 15, 2024 12:34 PM

புதுடில்லி: ‛‛ ஹிந்து, முஸ்லிம் என அரசியல் செய்ய மாட்டேன். இது எனது தீர்மானம்'' என பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தீர்மானம்
உ.பி., மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதன் பின்னர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
இந்த நாட்டு மக்கள் எனக்கு ஓட்டுப்போடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நான் என்று ஹிந்து, முஸ்லிம் என அரசியல் செய்கிறோனோ அன்று பொதுவாழ்க்கைக்கு தகுதி அற்றவன் ஆகிவிடுவேன். ஹிந்து, முஸ்லிம் என அரசியல் செய்ய மாட்டேன். இது தான் எனது அரசியல் தீர்மானம்.
அதிர்ச்சி
அதிக குழந்தைகளை பெற்றவர்களை பற்றி நான் பேசும் போது, அதனை முஸ்லிம்கள் என நினைத்துக் கொள்வது ஏன்? இது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. ஏழைக் குடும்பங்களின் நிலை இதுதான். எங்கு வறுமை இருக்கிறதோ, அங்கு நிறைய குழந்தைகள் உள்ளனர்.
ஹிந்து குடும்பத்திலும் இதுபோன்ற பிரச்னை உள்ளது. அவர்களால், குழந்தைகளுக்கு சரியான கல்வியை கொடுக்க முடியவில்லை. நான் ஹிந்துக்கள் என்றோ அல்லது முஸ்லிம்கள் என்றோ பெயர் சொல்லவில்லை. உங்களால் எத்தனை குழந்தைகளை வளர்க்க முடியுமோ அத்தனை குழந்தைகளை மட்டும் பெற்றுக் கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளேன். உங்கள் குழந்தைகளை அரசு கவனித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையை உருவாக்காதீர்கள்.
முஸ்லிம் நண்பர்கள்
நான் சிறு வயதில் முஸ்லிம் குடும்பத்தினர் மத்தியில் வாழ்ந்தேன். எனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உள்ளனர். 2002க்கு பிறகு எனது பெயரை கெடுக்க முயற்சி நடந்தது. எனது வீடருகே முஸ்லிம் குடும்பத்தினர் இருந்தனர். ரம்ஜான் அன்று, வீட்டில் சமைக்க மாட்டோம். முஸ்லிம் வீடுகளில் இருந்து எங்களுக்கு உணவு வரும்.
ஆதரவு
குஜராத் கலவரத்திற்கு பின்பு, ஆமதாபாத்தில் மானேக் சவுக் என்ற இடம் உள்ளது. அங்கு மாலையில் பலர் சென்று உணவு சாப்பிடுவர். அதில் அனைத்து வியாபாரிகளும் முஸ்லிம்கள். வாங்குபவர்கள் ஹிந்துகள். சிலரை அனுப்பி ஆய்வு செய்ய சொன்னேன். அப்போது எனக்கு எதிராக ஒருவர் பேசும் போது, கடைக்காரர் ஒருவர் அவரை நிறுத்தி, ‛மோடிக்கு எதிராக ஒரு வார்த்தை கூறாதீர்கள். இன்று எனது குழந்தை பள்ளிக்கு செல்வதற்கு மோடியே காரணம் ' என்றார். அவரது கருத்தையே 90 சதவீதம் பேர் கூறினர்.
தாரக மந்திரம்
இது போல் எனது வாழ்க்கையில் நிறைய நடந்துள்ளது. அதனை நான் விளம்பரப்படுத்துவது கிடையாது. நான் ஓட்டு வங்கி அரசியலுக்காக பணியாற்ற மாட்டேன். ஏதாவது தவறு நடந்தால், அதனை தவறு என சொல்லிவிடுவேன். ‛‛ அனைவரின் வளர்ச்சி; ஒவ்வொருவரின் வளர்ச்சி ' என்பதே எனது தாரக மந்திரம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

