''ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க மாட்டேன்'': ராகுல்
''ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க மாட்டேன்'': ராகுல்
UPDATED : ஜன 16, 2024 03:10 PM
ADDED : ஜன 16, 2024 02:47 PM

கோஹிமா: ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ., ஜன.,22ம் தேதி நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முழுக்க முழுக்க நரேந்திர மோடியின் அரசியல் விழாவாக ஆக்கிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள காங்., எம்.பி., ராகுல், இவ்விழாவில் பங்கேற்க போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல் 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை' என்ற யாத்திரை மணிப்பூரில் 2 நாட்களுக்கு முன்பு துவக்கினார். 3ம் நாளான இன்று நாகாலாந்தின் கோஹிமா பகுதியில் யாத்திரை மேற்கொண்டார். இதன் இடையே நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் கூறியதாவது: இது பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை. சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதி, மக்களின் பிரச்னைகளை எழுப்புவது தான் இதன் குறிக்கோள்.
மணிப்பூருக்குக் கடுமையான அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணத்தின் காரணமாக யாத்திரையை மணிப்பூரிலிருந்து துவக்கினோம். முதன்முறையாக, ஒரு இந்திய மாநிலத்தில் பல மாதங்களாக வன்முறைகள் நடந்தன. ஆனால், பிரதமரும், பா.ஜ., தலைவர்களும் அதைப் பார்க்கக்கூட செல்லவில்லை. தற்போது நாகாலாந்து வந்துள்ளோம். இங்குள்ள மக்களுக்கும் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நான் இதை பாத யாத்திரையாக மேற்கொள்ள விரும்பினேன். ஆனால் அது நீண்ட நாட்களாக நடக்கும். நம்மிடம் அவ்வளவு நாட்கள் இல்லை என்பதால், சுருக்கமான யாத்திரையாக மேற்கொள்கிறேன்.
அரசியல் விழா
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ., ஜன.,22ம் தேதி நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முழுக்க முழுக்க நரேந்திர மோடியின் அரசியல் விழாவாக ஆக்கிவிட்டனர். இது ஆர்எஸ்எஸ், பா.ஜ., விழா; அதனால் தான் அந்த விழாவிற்கு செல்லமாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். ஹிந்து மதத்தின் தலைவர்கள் கூட, இந்த விழாவைப் பற்றி தங்கள் பார்வையை பகிரங்கப்படுத்தியுள்ளனர்.
இது ஒரு அரசியல் நிகழ்வு; மோடியின் நிகழ்ச்சி. எனவே, இந்தியப் பிரதமரைச் சுற்றி வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை. மதரீதியிலான நிகழ்ச்சிகளை பா.ஜ., அரசியல் ரீதியிலாக்குகிறது. தனிப்பட்ட முறையில் ஒருவரின் வளர்ச்சிக்காக மதத்தை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.