ஆட்சியை கவிழ்ப்பேன்! பா.ஜ., - எம்.எல்.ஏ, மிரட்டல்
ஆட்சியை கவிழ்ப்பேன்! பா.ஜ., - எம்.எல்.ஏ, மிரட்டல்
ADDED : டிச 01, 2024 04:11 AM

பெலகாவி: ''பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு நீதி கிடைக்காவிட்டால், எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் கவிழ்ப்பேன்,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி மிரட்டல் விடுத்துள்ளார்.
கோகாக்கில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பிற்படுத்தப்பட்ட சமூகங்களை எப்போதும் ஒடுக்கும் முயற்சிகள் அதிகமாக நடக்கின்றன. அந்த சமூகங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் நாட்களில் பிரச்னை செய்வேன்.
வரும் 2028 சட்டசபை தேர்தலுக்கு பின், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு நீதி கிடைக்காவிட்டால், எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் கவிழ்ப்பேன்.
இதுவரை எங்களை அனைவரும் ஏமாற்றிஉள்ளனர். குருபர், உப்பார சமூக தலைவர்களுக்கு அரசியல்ரீதியாக உயர்வு கிடைக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு நீதி கிடைக்க, என்னுடன் இணைந்து போராடுங்கள் என்று, மடாதிபதிகளிடம் கேட்டுள்ளேன்.
தவிர்க்க முடியாத காரணங்களால் நான் பா.ஜ.,வுக்கு சென்றேன். காங்கிரசில் ஐந்து முறையும், பா.ஜ.,வில் இரண்டு முறையும் எம்.எல்.ஏ.,வாக உள்ளேன்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, அந்த கட்சி எனக்கு எந்த தீங்கும் செய்யவில்லை. ஒருவரால் மட்டும் அந்த கட்சியில் இருந்து வெளியே வந்தேன். பா.ஜ.,விலும் எனக்கு எதிராக சதி நடக்கிறது. அதை பார்த்து, நான் பயப்பட மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

