இப்பவும் சொல்றேன்... இ.வி.எம்., மெஷின் சூப்பர்; காங்., எம்.பி., கார்த்தி சிதம்பரம் திட்டவட்டம்!
இப்பவும் சொல்றேன்... இ.வி.எம்., மெஷின் சூப்பர்; காங்., எம்.பி., கார்த்தி சிதம்பரம் திட்டவட்டம்!
ADDED : நவ 25, 2024 02:06 PM

புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீதான நம்பகத்தன்மையில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று காங்., எம்.பி., கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி படுமோசமான தோல்வியை தழுவியது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் வெறும் 57 இடங்களை மட்டுமே வென்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழந்தது.
இந்தத் தேர்தல் தோல்வியை தொடர்ந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது காங்கிரஸ் கட்சியினர் வழக்கம் போல, குற்றச்சாட்டையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பார்லிமென்ட் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வந்த தமிழகத்தைச் சேர்ந்த சிவகங்கை காங்., எம்.பி., கார்த்தி சிதம்பரத்திடம், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் (இ.வி.எம்.,) குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது, அவர் கூறியதாவது: 2004ம் ஆண்டு முதல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்டு வரும் தேர்தல்களில் நான் போட்டியிட்டு வருகிறேன். தனிப்பட்ட முறையில் நான் எந்த மோசமான அனுபவங்களையும் எதிர்கொள்ளவில்லை. அதேபோல, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களும் என்னிடம் இல்லை.
ஆனால், தனிப்பட்ட முறையில் மின்னணு ஓட்டுப்பதிவு மீதான நம்பத்தன்மையில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில், இ.வி.எம்., பயன்படுத்தி நடந்த தேர்தல்களில் வெற்றியும் பெற்றுள்ளோம். தோல்வியையும் சந்தித்துள்ளோம்.
இந்த விவகாரத்தில் என்னுடைய நிலைப்பாட்டில் நான் மாறவில்லை. ஆனால், என்னுடை கட்சியின் நிலைப்பாடு மாறுபட்டது. இ.வி.எம்., மீதுள்ள நம்பகத்தன்மை இல்லாததற்கு அவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும், என்று கூறினார்.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையே குறை கூறி வரும் நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் இந்தக் கருத்து அவர்களின் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.