தேஜஸ் போர் விமானத்தில் ஒன்றாக பறந்த ராணுவம், விமானப்படை தளபதிகள்
தேஜஸ் போர் விமானத்தில் ஒன்றாக பறந்த ராணுவம், விமானப்படை தளபதிகள்
UPDATED : பிப் 09, 2025 04:30 PM
ADDED : பிப் 09, 2025 04:19 PM

பெங்களூரூ: கர்நாடகாவில் நடக்கும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியையொட்டி, ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி, விமானப்படை தலைமை தளபதி ஏ.பி.சிங் ஆகியோர் தேஜஸ் போர் விமானத்தில் பறந்தனர்.
பெங்களூரு எலஹங்கா விமான பயிற்சி மையத்தில், நாளை(பிப்.10) முதல் பிப். 14ம் தேதி வரை 'ஏரோ இந்தியா 2025' விமான கண்காட்சி நடக்க உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகளின் விமானப் படைகளும் இந்தக் கண்காட்சியில் பங்கேற்க உள்ளன.
இந்தியா மட்டுமல்லாது, அமெரிக்காவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்தக் கண்காட்சியில் பல்வேறு தொழில் வாய்ப்புகள், பாதுகாப்பு மற்றும் விமானத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஆசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த விமான கண்காட்சியை பார்ப்பதற்கு ஏராளமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏரோ இந்தியா கண்காட்சியையொட்டி, இந்திய விமானப்படை விமானங்களின் இறுதி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி, விமானப்படை தலைமை தளபதி ஏ.பி.சிங் ஆகியோர் இன்று(பிப்.9) பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்திலிருந்து தேஜஸ் போர் விமானத்தில் பறந்தனர். சுமார் 45 நிமிடங்கள் விமானத்தில் பயணம் மேற்கொண்டனர்.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானத்தில் இரு ராணுவ தலைமை அதிகாரிகள் ஒன்றாக பயணிப்பது இதுவே முதல்முறையாகும்.