ஐ.ஏ.எஸ்., தேர்வு ஒரு அக்னி பரீட்சை: எமர்ஜென்சி அனுபவங்களை பகிர்ந்த அமைச்சர் ஜெய்சங்கர்
ஐ.ஏ.எஸ்., தேர்வு ஒரு அக்னி பரீட்சை: எமர்ஜென்சி அனுபவங்களை பகிர்ந்த அமைச்சர் ஜெய்சங்கர்
UPDATED : ஜூலை 21, 2025 03:28 AM
ADDED : ஜூலை 20, 2025 11:38 PM

புதுடில்லி: “மத்திய அரசால் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ்., தேர்வு ஒரு அக்னி பரீட்சை; எமர்ஜென்சி காலம் ரத்தான நாளில், என் நேர்காணல் அமைந்தது,” என, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், தன் அனுபவத்தை பகிர்ந்தார்.
ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற 'சிவில் சர்வீசஸ்' சேவையில் நுழைவோருக்கான வரவேற்பு விழா, புதுடில்லியில் நேற்று நடந்தது.
நேர்காணல்
இதில், சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற இந்திய வெளியுறவு சேவை அதிகாரியும், வெளியுறவுத் துறை அமைச்சருமான ஜெய்சங்கர், 70, பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், வெளியுறவு சேவை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டது முதல், வெளியுறவு அமைச்சர் வரையிலான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட தேர்வுகள், அக்னி பரீட்சையை போன்றவை. மக்களுக்கான சேவையை வழங்க வரும் நபர்களை தேர்வு செய்ய உலகில் நடத்தப்படும் மிகவும் தனித்துவமான சோதனை. தேர்வை தாண்டி நடத்தப்படும் நேர்காணல் மிகவும் சவாலானது.
அதற்கான நேர்க்காணல் எனக்கு நடந்தது, மிகவும் சுவாரசியமான அனுபவம். முன்னாள் பிரதமர் இந்திரா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 'எமர்ஜென்சி' காலம் ரத்து செய்யப்பட்ட 1977, மார்ச் 21ம் தேதி எனக்கு நேர்க்காணல் நடந்தது.
அப்போது எனக்கு வயது 22. மிகவும் பதற்றமான சூழலில், டில்லியில் நடந்த நேர்காணலில் பங்கேற்றேன்.
ஜவஹர்லால் நேரு பல்கலையில் பயின்றபோது, 1977ல் நடந்த லோக்சபா தேர்தலுக்காக, மாணவர்களாகிய நாங்கள் கடுமையாக உழைத்தோம். அது எனக்கு அப்போது கைகொடுத்தது.
நடந்து முடிந்த தேர்தலில் என்ன நடந்தது என்பது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போதுதான் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்தன. நான் பார்த்தது, அனுபவித்தது என அனைத்தையும் சேர்த்து பதிலளித்தேன்.
மறக்கக்கூடாது
மத்திய அரசுடன் நேரடி தொடர்பில் இருந்த, அனுதாபமுள்ள அதிகாரிகளிடம், அவர்கள் மனம் புண்படாமல், என்ன நடந்தது என்பது விளக்குவது மிகவும் சவாலாக இருந்தது.
ஒரு அழுத்தமான சூழலில், மக்கள் மனம் புண்படாமல், எவ்வாறு சேவை செய்வது என்பதை அந்த நேர்காணல் எனக்கு கற்று தந்தது. அதேசமயம், எமர்ஜென்சி காலம் தந்த தோல்வியையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
நாட்டில் என்ன நடக்கிறது என தெரியாமல் வாழ்பவர்கள் உண்டு அவர்களுக்கும் நம் சேவை அவசியம் என்பதையும் அன்று நான் கற்றுக் கொண்டேன்.
நாட்டின் மிக உன்னதமான சேவையில் நீங்கள் இணைகிறீர்கள். அடுத்து வரும் 25 ஆண்டுகள் அமிர்த காலம். இந்த சகாப்தத்தின் பயனாளியாகவும், தலைவர்களாகவும் நீங்களே இருப்பீர்கள்.
வரும் 2047ம் ஆண்டுக்குள், வளர்ச்சியடைந்த பாரதத்தின் தொலைநோக்கு பார்வைக்கு உங்கள் பங்களிப்பு மிகவும் அவசியம். நல்லாட்சி என்பது தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதை நீங்கள் மறக்கக்கூடாது.
வெளிநாட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும், உலகிற்கு முன் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும், எந்தவொரு இந்தியருக்கும் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய பாக்கியம், மரியாதை.
பங்களிப்பு அவசியம்
வரும், 2030ம் ஆண்டுக்குள், பொருளாதார ரீதியாக நாம் 3வது இடத்தைப் பிடிப்போம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், 2ம் இடத்தில் இருந்து முதலிடத்துக்கு செல்வது மிகவும் கடினமாக இருக்கும்.
அதற்கு உங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்க வேண்டும். வரவிருக்கும் சகாப்தம் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்கள், விண்வெளி, எலக்ட்ரானிக் வாகனங்கள் என அதி நவீன தொழில்நுட்பங்களுடன் இயங்கக் கூடியது.
எந்த சவால்கள் வந்தாலும், அதை முறியடித்து நம் நாடு முன்னேறி செல்வதற்கு உங்கள் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.