ADDED : ஜன 04, 2026 02:19 AM

ஆமதாபாத்: குஜராத் மாநிலம், சுரேந்திரநகர் கலெக்டராக இருந்தவர் ராஜேந்திர குமார் படேல். இவரது அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றுபவர் சந்திர சிங் மோரி.
இவர் வருவாய்த் துறை துணை அதிகாரியாக பணியாற்றியபோது, சவுராஷ்டிரா குடியேற்ற குத்தகைத் தீர்வு சட்டத்தின்படி, பொதுமக்கள் பெயருக்கு நிலத்தை மாற்றும் பணிக்கான விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது, விண்ணப்பங்களுக்கு விரைவில் அனுமதி வழங்க விண்ணப்பதாரர்களிடம் மோரி லஞ்சம் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக பணமோசடி வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், மோரி மற்றும் சிலரை கைது செய்தனர்.
இந்நிலையில், லஞ்சம் பெற்ற வழக்கில் தொடர்பிருப்பதாக கூறி, சுரேந்திர நகர் கலெக்டர் ராஜேந்திரகுமார் படேலை, ஒரு வாரத்துக்கு முன் எந்த பதவியும் வழங்காமல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாநில அரசு மாற்றியது.
இந்நிலையில், லஞ்சம்பெற்றதில் தொடர்புடையதாக பணமோசடி வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, படேலை கைது செய்தது.
முன்னதாக அமலாக்கத் துறையினர் அளித்த புகாரின்படி, குஜராத் லஞ்ச ஒழிப்பு போலீசாரும் படேல் மற்றும் மூவர் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

