ஐ.ஏ.எஸ்., மத 'வாட்ஸாப்' குழு போன் 'ரீசெட்' ஆனதாக தகவல்
ஐ.ஏ.எஸ்., மத 'வாட்ஸாப்' குழு போன் 'ரீசெட்' ஆனதாக தகவல்
ADDED : நவ 10, 2024 12:16 AM
திருவனந்தபுரம்: கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத்தின் ஐ.ஏ.எஸ்., அதிகாரி கோபாலகிருஷ்ணன், சமீபத்தில் போலீசில் அளித்த புகாரில், 'என் மொபைல் போன் எண் 'ஹேக்' செய்யப்பட்டு விட்டது.
'அந்த எண்ணில் இருந்து பல்வேறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை சேர்த்து, 'ஹிந்து கம்யூனிட்டி குரூப்' என்ற பெயரில் வாட்ஸாப் குழு துவங்கப்பட்டுள்ளது. இந்த விபரம் தெரிய வந்ததும், அந்த குழுவை உடனடியாக கலைத்து விட்டேன்' என குறிப்பிட்டிருந்தார்.
சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் ஸ்பர்ஜன் குமார் நேற்று கூறியதாவது:
மத குழுவை உருவாக்க பயன்படுத்தப்பட்ட, வாட்ஸாப் எண் உடைய ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மொபைல் போன் முற்றிலும், 'ரீசெட்' செய்யப்பட்டு விட்டது.
அதனால், அவர் கூறியது போல் ஹேக் செய்யப்பட்டதா என்பதை தடயவியல் நிபுணர்களால் கண்டறிய முடியவில்லை. இது தொடர்பாக, டி.ஜி.பி.,க்கு அறிக்கை அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
'இந்த அறிக்கை ரகசியமானது. மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்' என, டி.ஜி.பி., அலுவலகம் தெரிவித்துள்ளது.