மரண சேம்பர்களாக மாறிய பயிற்சி மையங்கள்: சுப்ரீம் கோர்ட் ‛‛சுளீர்''
மரண சேம்பர்களாக மாறிய பயிற்சி மையங்கள்: சுப்ரீம் கோர்ட் ‛‛சுளீர்''
ADDED : ஆக 05, 2024 01:14 PM

புதுடில்லி: மழைநீரில் மூழ்கி 3 ஐ.ஏ.எஸ்., பயிற்சி மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‛‛ பயிற்சி மையங்கள், மரண சேம்பர்களாக மாறி வருகின்றன'' எனக்கூறியுள்ளது.
போராட்டம்
கடந்த சில நாட்களுக்கு முன்னர், டில்லியில் பெய்த கனமழை காரணமாக பழைய ராஜேந்திரா நகரில் அமைந்துள்ள ‛ ராவ்' யுபிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி மையத்தின் கீழே உள்ள பேஸ்மென்ட் தளத்தில் உள்ள நூலகத்தில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதில் 3 ஐ.ஏ.எஸ்., பயிற்சி மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூட உத்தரவு
இது குறித்த வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், உரிய விதிகளை பின்பற்றாத பயிற்சி மையங்களை மூடும்படி உத்தரவிட்டது. இதை எதிர்த்து பயிற்சி மையங்கள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜால் புயான் ஆகியோரை கொண்ட அமர்வு கூறியதாவது: பயிற்சி மையங்களை அதிகாரிகள் முறைப்படுத்தவில்லை. டில்லியில் மட்டும் நூற்றுக்கணக்கான மையங்கள் செயல்படும் நிலையில், அதற்கென விதிகள் ஏதும் வகுக்கப்பட்டு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
அபராதம்
இந்த மையங்கள், மரண சேம்பர்களாக மாறிவிட்டன. விதிகளை பின்பற்றாதவரை, வகுப்புகளை ஆன்லைன் முறையில் நடத்தலாம். இந்த மையங்கள் மாணவர்களின் விருப்பங்களோடு விளையாடுகின்றன. முறையான காற்றோட்டம், பாதுகாப்பான நுழைவு மற்றும் வெளியேறும் வழி அமைக்கப்பட வேண்டும். மாணவர்கள் மரணம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். மேலும் பயிற்சி மையங்களின் கூட்டமைப்புக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.