பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்தது ஐகோர்ட்
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்தது ஐகோர்ட்
ADDED : பிப் 27, 2024 09:40 PM
புதுடில்லி:டில்லி சட்டசபையில் இருந்து காலவரையின்றி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதை எதிர்த்து, ஏழு பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பை டில்லி உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
டில்லி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 15ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்கியது.
அரசின் பணிகளைப் பாராட்டி கவர்னர் பேசும்போது, இருக்கையில் இருந்து எழுந்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கடும் அமளி செய்தனர்.
இதையடுத்து, சபை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., திலீப் பாண்டே வேண்டுகோள் விடுத்தார்.
அதை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் மோகன்சிங் பிஷ்ட், அஜய் மஹாவர், ஓ.பி.சர்மா, அபய் வர்மா, அனில் பாஜ்பாய், ஜிதேந்தர் மஹாஜன் மற்றும் விஜேந்தர் குப்தா ஆகிய ஏழு பேரையும் காலவரையின்றி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், இந்தப் பிரச்னையை சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்பினார்.
சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கு விசாரணையில் இருப்பதால், அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு டில்லி சட்டசபை சிறப்புரிமைக் குழுவுக்கு உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

