ஜம்மு-காஷ்மீரில் தொங்கு சட்டசபை அமைந்தால்:துணை நிலை கவர்னரே'கிங் மேக்கர்' ?
ஜம்மு-காஷ்மீரில் தொங்கு சட்டசபை அமைந்தால்:துணை நிலை கவர்னரே'கிங் மேக்கர்' ?
ADDED : அக் 07, 2024 10:42 PM

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில் நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், யாருக்கும் பெரும்பான்மையின்றி தொங்கு சட்டசபை அமைந்தால், துணை நிலை கவர்னரால் நியமிக்கப்படும் 5 எம்.எல்.ஏ.க்கள் தான் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு 2019 ஆக.05 ரத்து செய்யப்பட்டது. மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
இதில் சட்டசபை உள்ள ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை கவர்னருக்கு 5 எம்.எல்.ஏ.க்களை நியமிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் இரு பெண்கள், மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்தவர், காஷ்மீர் பண்டிட்டுகள் என்ற இட ஒதுக்கீ்டு படி நியமனம் செய்யப்படுகின்றனர்.
இந்த 5 நியமன எம்.எல்.ஏ.க்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு நிகராக அதே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவர்கள் சட்டசபை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்து கொண்டு வாக்களிக்கலாம். சட்டம் இயற்றப்படும் போது மசோதாவிற்கு ஆதரவு அளிக்கலாம்.
எனவே நாளைய ஓட்டு எண்ணிக்கையில் ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைப்பதில் கட்சிகளுக்கு சிக்கல் ஏற்பட்டால், துணை நிலை கவரான மனோஜ் சின்ஹா தான் நியமிக்கும் 5 எம்.எல்..க்களை துணை கொண்டு ஆட்சியை அமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்.
ஏற்கனவே காங்., தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியன துணை நிலை கவர்னருக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கும் அதிகாரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.