காங்., ஆட்சிக்கு வந்தால் மரணத்திற்கு பிறகும் வரி: பிரதமர் மோடி எச்சரிக்கை
காங்., ஆட்சிக்கு வந்தால் மரணத்திற்கு பிறகும் வரி: பிரதமர் மோடி எச்சரிக்கை
ADDED : ஏப் 24, 2024 12:31 PM

ராய்ப்பூர்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்களிடம் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்., திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரசின் மோசமான ஆட்சியும், அலட்சியமும்தான் நாட்டின் அழிவுக்குக் காரணம். இன்றைக்கு பயங்கரவாதம் மற்றும் நக்சலிசத்துக்கு எதிராக பா.ஜ., கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. வன்முறையைப் பரப்பும் மக்களைத் துணிச்சலானவர்கள் என்று சொல்லி காங்கிரஸ் ஆதரிக்கிறது. பயங்கரவாதிகள் கொல்லப்படும்போது கண்ணீர் சிந்துகிறது, இது போன்ற செயல்களால், நாட்டின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்துவிட்டது.
ஆந்திராவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க பல ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் முயற்சி செய்தது. பின்னர் நாடு முழுவதும் அமல்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்படும். நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு கொடுப்பார்கள். பா.ஜ., கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதரீதியிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்காது.
காங்கிரசின் திட்டம்
நாட்டு மக்களிடம் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. நாட்டு மக்களின் சொத்துகளை பறிப்பதற்காக காங்கிரஸ் கட்சி திட்டம் தீட்டியுள்ளது. நாட்டில் உள்ள ஏழை மக்களின் சொத்துகள், உடைமைகள் மீது அக்கட்சி கண் வைத்துள்ளது. மக்கள் உழைத்து சேர்த்த சொத்து, பணத்தை பறிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

