மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியா பொருளாதாரத்தில் பெரும் நாடாகும்: நிர்மலா சீதாராமன்
மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியா பொருளாதாரத்தில் பெரும் நாடாகும்: நிர்மலா சீதாராமன்
ADDED : பிப் 18, 2024 01:51 PM

புதுடில்லி: மோடி 3வது முறையாக பிரதமர் ஆகும் போது, இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என பா.ஜ., தேசியக்குழு கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் தமிழில் பேசுகையில் குறிப்பிட்டார்.
புதுடில்லியில் நடக்கும் பா.ஜ., தேசியக்குழு கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆங்கிலத்தில் உரையாற்றி முடித்தார்.
அயராத முயற்சி
இதையடுத்து, தமிழில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: நமது பிரதமர் மோடிக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பெரிய சபையில் தமிழில் பேச சொன்னதற்கு நன்றி. கீழ்மட்டத்தில் இருந்த நம் நாட்டை 5வது இடத்திற்கு பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார். மோடி 3வது முறையாக பிரதமர் ஆகும் போது, இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும். இதற்கு காரணம் அயராத முயற்சி. நொறுங்கிப் போகும் நிலையில் இருந்த நாட்டை தற்போது 5வது இடத்திற்கு பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்.
முதலீடு
நம் நாட்டில் உள்ள வங்கிகளை ஆதாய நிலைக்கு கொண்டு வந்துள்ளார் பிரதமர் மோடி. உலக அளவில் வேற நாட்டில் இருக்கக் கூடிய வங்கிகள், தங்கள் பணத்தை எந்த நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று யோசித்து கொண்டு வருகிறது. நமது பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால், முதலீடு செய்கிறோம் என முன் வருகின்றனர். அதனால் நம் நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல விதமான, திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். விரைவில் இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவதற்கு இந்த மாதிரியான பல்வேறு முயற்சிகளை பிரதமர் மோடி எடுத்துள்ளார்.
மீண்டும் ஆட்சி
பிரதமர் மோடியின் ஒரு வாக்கியம் இருக்கு. 'எல்லாருடனும் கூட சேர்ந்து இருப்போம். எல்லாருடைய நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருப்போம். எல்லாரையும் முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல, அனைவரின் உழைப்பும், நம்பிக்கையும் சேர்ந்து இருக்கும். அப்போது தான் நம் நாடு 2047ம் ஆண்டு முன்னேற்ற அடைந்த நாடாக மாறும்'' என சொன்னார்.
அதற்கு நாம் எல்லாரும் சேர்ந்து உழைக்கிறோம். நான் ஆங்கிலத்தில் சொன்னதும் புரிந்து இருக்கும். மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வெற்றி பெற்று, நம்ம கட்சி வெற்றி பெற்று எல்லாரும் முயற்சி செய்து மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். உங்களுடைய ஆதரவு தேவை. இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து தெலுங்கில் சில நிமிடங்கள் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
தமிழிலும், தெலுங்கிலும் நிர்மலா சீதாராமன் பேசும் போது, பாரத் மண்டபத்தில் கை தட்டும் சத்தம் ஒலித்தது.