தவறு நடந்தால் ராஜினாமா செய்வேன்; அசாம் முதல்வர் சர்மா ஆவேசம்
தவறு நடந்தால் ராஜினாமா செய்வேன்; அசாம் முதல்வர் சர்மா ஆவேசம்
UPDATED : மார் 13, 2024 05:56 AM
ADDED : மார் 13, 2024 02:24 AM

''அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு விண்ணப்பிக்காத ஒருவருக்கு குடியுரிமை அளிக்கப்பட்டாலும், பதவியை ராஜினாமா செய்யும் முதல் நபர் நானாக இருப்பேன்,'' என, அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து, 2014 டிச., 31க்கு முன், நம் நாட்டுக்குள் ஊடுருவிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்கும், குடியுரிமை திருத்த சட்டம், நாடு முழுதும் நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது.
இதற்கு அசாம் எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாநிலம் முழுதும் வேலை நிறுத்தத்துக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்றத்தை நாடலாம்
இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா நேற்று கூறியதாவது:
குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தபின், லட்சக்கணக்கான மக்கள் மாநிலத்திற்குள் நுழைவர் என, போராட்டம் செய்பவர்கள் கூறுகின்றனர். அப்படி நடந்தால் அதை எதிர்த்துப் போராடும் முதல் ஆளாக நான் இருப்பேன்.
கடந்த 2014க்கு பின், நம் நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது. அது போன்ற விண்ணப்பங்கள் மிகவும் சொற்பமாகவே இருக்கும்.
நான் அசாம் மண்ணின் மைந்தன். தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு விண்ணப்பிக்காத ஒருவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டாலும், அதை எதிர்த்து பதவியை ராஜினாமா செய்யும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தில் இருக்கும் விபரங்கள், அதுகுறித்து தெளிவுபடுத்தும். அதை எதிர்ப்பவர்கள் கூறுவதில் உண்மை உள்ளதா இல்லையா என்பது சில தினங்களில் விளங்கி விடும்.
மாநிலத்தில் குடியுரிமை கேட்டு விண்ணப்பிப்போர் லட்சக்கணக்கில் உள்ளனரா அல்லது ஆயிரக்கணக்கில் உள்ளனரா என்பது, ஒரு மாதத்தில் தெரிந்து விடும்.
ஏற்கனவே சட்டம் இயற்றப்பட்டு விட்டதால், இப்போது போராட்டங்கள் நடத்தக்கூடாது. யாருக்கேனும் குறை இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உச்ச நீதிமன்றத்தில் மனு
இதற்கிடையே, சி.ஏ.ஏ., சட்ட விதிகளுக்கு எதிராக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு ஆகியவை, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. அதில், 'குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது.
இந்த சட்டத்தை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்கும்படி வலியுறுத்தப்பட்டு உள்ளது.

