'நல்லாசிரியர்' இருந்தால் நாடும் நமதே... சிக்கபல்லாப்பூரில் ஒரு 'கல்வி கண்மணி'
'நல்லாசிரியர்' இருந்தால் நாடும் நமதே... சிக்கபல்லாப்பூரில் ஒரு 'கல்வி கண்மணி'
ADDED : டிச 01, 2024 04:04 AM

சிக்கபல்லாப்பூர் தேவகுடிபள்ளி தாலுகா சடலாவாரிப்பள்ளி கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினரே உள்ளனர். இவர்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரே அதிகம்.
இந்த கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இதற்கு மதில் சுவர் கிடையாது.
இதனால், அப்பகுதியை சேர்ந்த பலர், தங்கள் வீடுகளில் உள்ள மாடுகளை, பள்ளி வளாகத்தில் கட்டி வந்தனர்.
சுத்தம் என்பதை பார்க்க முடியாது. பள்ளியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதை பார்க்கலாம்.
இதனால், பள்ளி மாணவ - மாணவியரும், ஆசிரியரும் மூக்கை பொத்திக் கொண்டு தான் நடமாட வேண்டியிருந்தது.
6 மாணவர்கள்
பள்ளியின் நிலையை பார்த்து எந்த ஆசிரியரும் பணிக்கு வர விரும்புவதில்லை. இந்த பள்ளியில், சுமா என்ற ஒரே ஒரு ஆசிரியை மட்டுமே பணியில் இருந்தார். ஆறு மாணவ - மாணவியர் படித்து வந்தனர்.
இந்த வேளையில், சி.முனிராஜு என்ற ஆசிரியர், பணி புரிய சம்மதம் தெரிவித்தார். அவரும் பள்ளிக்கு வந்தார்.
ஆனால், அங்குள்ள நிலைமையை பார்த்து கண்ணீர் வடிக்காத குறை தான்.
மாணவர்களை அரவணைத்தார். மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்களை அதிகரிக்க என்ன செய்யலாம் என யோசித்தார்.
மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கு திட்டம் வகுத்தார். பள்ளியின் அலங்கோல நிலைமையை, கிராம மக்கள், பள்ளி மாணவர்களின் உதவியுடன் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்தார்.
முதல் வெற்றி
பின்னர், வீடு, வீடாக சென்று, அரசு பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதன் விளைவாக 2018- - 2019 கல்வியாண்டில், தனியார் பள்ளியில் படித்த 20 மாணவர்களை, முனிராஜு மீது உள்ள நம்பிக்கையால், பெற்றோர் அரசு பள்ளியில் சேர்த்தனர். இது அவரது முயற்சிக்கு கிடைத்த 'முதல் வெற்றி'.
அப்போதைய தாலுகா பஞ்சாயத்து துணைத்தலைவர் சரஸ்வதம்மாவிடம் உதவி பெற்று, பள்ளிக்கு மதில் சுவர் கட்ட ஏற்பாடு செய்தார்.
எஸ்.எஸ்.ஏ., மானியத்தின் கீழ் இரண்டு கழிப்பறைகள் கட்டப்பட்டன, மாவட்ட பஞ்சாயத்து மானியத்தின் கீழ் அறைகளின் கூரைகள் சீரமைக்கப்பட்டு, டைல்ஸ் ஒட்டப்பட்டன.
தினமும், மாணவர்களுக்கு தியானம், உடற்பயிற்சி, செயல்பாடுகள் மூலம் கற்றல், பிரார்த்தனை போன்றவற்றை கற்பிக்கிறார்.
வகுப்பறை முழுவதும் விலங்குகள், பறவைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் வரைபடங்கள் நிறைந்து வகுப்பறையே வண்ணமயமாக காட்சி அளிக்கிறது.
சிறந்த ஆசிரியர்
மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, பள்ளி மேம்பாடு, சிறப்பாக கற்பித்தல் போன்றவற்றால் முனிராஜுக்கு மாவட்ட அளவில் 'நல்லாசிரியர் விருது' அளிக்கப்பட்டது.
கொரோனா கால கட்டத்தில் ஆன்லைன் மூலமும் கற்பித்து மாணவர்களின் அறிவுப்பசிக்கு விருந்து அளித்தார்.
தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில், சிறந்த ஆசிரியர்கள் உள்ளனர். அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும்.
பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து தங்கள் பாரம்பரியத்தை நிலை நிறுத்த வேண்டும்
- நமது நிருபர் -.

