வாய்ப்பு கிடைக்காவிடில் பணம் விரயமாகி விடுமே! அதிர்ஷ்டத்துக்காக காத்திருக்கும் ம.ஜ.த., தலைவர்கள்
வாய்ப்பு கிடைக்காவிடில் பணம் விரயமாகி விடுமே! அதிர்ஷ்டத்துக்காக காத்திருக்கும் ம.ஜ.த., தலைவர்கள்
ADDED : மார் 06, 2024 04:50 AM

கர்நாடகவை பொறுத்தவரையில், பா.ஜ.,வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.ஜ.த., இணைந்துள்ளது. தொகுதி பங்கீடு குறித்து, முன்னாள் முதல்வர் குமாரசாமி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் ஏற்கனவே இரண்டுகட்ட பேச்சு நடத்தினார்.
ஹாசன், கோலார், மாண்டியா, மைசூரு, சிக்கபல்லாப்பூர், பெங்களூரு வடக்கு ஆகிய ஆறு தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கும்படி, ம.ஜ.த., தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இன்று இறுதி
ஆனால், ஹாசன், கோலார், மாண்டியா ஆகிய மூன்று தொகுதிகளை ஒதுக்குவதற்கு பா.ஜ., தலைமை உடனடியாக ஒப்புதல் வழங்கியதாம். மற்ற தொகுதிகள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இன்று புதுடில்லியில் நடக்கின்ற பா.ஜ.,வின் மத்திய பார்லிமென்ட் குழு கூட்டத்துக்குப் பின், தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.
தொகுதி பங்கீடு முடியாததால், தேர்தலில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதில் ம.ஜ.த., தலைவர்கள் ஆவலுடன் உள்ளனர். தேர்தலுக்கு இப்போதில் இருந்தே தயாரானால், அதிக பணம் செலவழிக்க வேண்டி இருக்கும். ஒருவேளை வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில், செலவழித்தது விரயமாகிவிடும் என்று உத்தேச வேட்பாளர்கள் யோசிக்கின்றனர்.
தங்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கவில்லை என்றால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கையை பிசைகின்றனர். தொண்டர்களையும், தன் ஆதரவாளர்களையும் கவனித்துக் கொள்ள செலவழிக்கவும் தயாரில்லை. வாய்ப்பு வேண்டும் என்றால் எப்படி முடியும்?
தவிப்பு
ஒன்றை அடைய, மற்றொன்றை இழக்க வேண்டும் என்ற கான்செப்ட்டினுள் வர முடியாமல் தவிக்கின்றனர். ஹாசன் தொகுதி எம்.பி.,யாக இருக்கும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வலுக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு கிடைப்பது உறுதி.
எனவே அவர் மட்டுமே அதிகப்படியாக செலவு செய்து வருவது தெரிய வந்துள்ளது. வீடு தேடி வருபவர்களையும், அவரே தேடிச் சென்றும் கவனிக்கிறாராம்.மற்றபடி, தேர்தலில் போட்டியிடும் அதிர்ஷ்டம் கிடைத்தால் பார்ப்போம் என்ற மன நிலைக்கே இருகட்சியின் பெரும்பாலான தலைவர்கள் வந்துவிட்டனர். தொகுதி பங்கீடு இறுதியான பின்னரே, ம.ஜ.த., தலைவர்கள் துண்டு போடலாம் என்று காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில், 'நமக்கு ஒதுக்கப்படுகின்ற அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டியது கட்டாயம். இதற்காக கடினமாக உழைத்து, நமது பலத்தை காண்பிக்க வேண்டும். யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம். வாழ்வா, சாவா என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், சவாலாக ஏற்று பாடுபட வேண்டும்' என, முன்னாள் முதல்வர் குமாரசாமி, ம.ஜ.த., தலைவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளாராம்.

