பூஜை செய்தால் காதல் திருமணம் நிச்சயம்; இன்ஸ்டாகிராம் ஜோதிடரை நம்பி ரூ.6 லட்சம் ஏமாந்த பெண்
பூஜை செய்தால் காதல் திருமணம் நிச்சயம்; இன்ஸ்டாகிராம் ஜோதிடரை நம்பி ரூ.6 லட்சம் ஏமாந்த பெண்
ADDED : பிப் 19, 2025 03:55 PM

புதுடில்லி: சிறப்பு பூஜைகள் செய்தால் காதல் திருமணம் சுபமாக நடக்கும் என்று உறுதி கூறிய போலி ஜோதிடரை நம்பி, பெங்களூருவைச் சேர்ந்த 24 வயது பெண் ரூ.6 லட்சத்தை இழந்தார்.
பாதிக்கப்பட்ட பெண், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் வசித்து வருகிறார். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். தனது எதிர்கால திருமணம் எப்படி இருக்கும், காதல் திருமணமா, பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணமா என்று அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார்.
இன்ஸ்டாகிராமில் ஜோதிட நிபுணர் என்று பதிந்து வைத்திருந்த விஜயகுமார் என்ற ஒருவரை தொடர்பு கொண்டார்.அந்த நபர் ஒரு போலி ஜோதிடர். அதை அறியாத இளம் பெண், தன்னைப் பற்றிய விவரங்களை போலி ஜோதிடரிடம் கொடுத்தார்.
அந்த நபரோ, 'உங்களுக்கு நீங்கள் விரும்பியபடி பெற்றோர் சம்பந்தத்துடன் காதல் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு சில பூஜைகள், சடங்குகள் நடத்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய அந்த பெண் பணம் கொடுத்தார். ஒவ்வொரு பூஜை முடியும்போதும், உங்கள் ஜாதகத்தில் சில பிரச்சனை உள்ளது. அதற்கு ஒரு சடங்கு செய்ய வேண்டும் என்று கூறுவது போலி ஜோதிடருக்கு வாடிக்கை. இப்படி பலமுறை பூஜை, சடங்கு நடத்தியதாக கூறி 6 லட்சம் ரூபாய் பணம் வாங்கி விட்டார். கடைசியில் தான் ஏமாற்றப்படுவதாக உணர்ந்த அந்தப் பெண், போலி ஜோதிடரிடம் சண்டை போட்டார்.
தான் கொடுத்த பணம் அனைத்தையும் திருப்பித் தர வேண்டும் என்று வற்புறுத்தினார். அவர் போலீசில் புகார் சொல்லக் கூடும் என்று பயந்த போலி ஜோதிடர், 13000 ரூபாய் மட்டும் திருப்பிக் கொடுத்தார்.
இனியும் பணம் கேட்டால், 'நீங்கள் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன்' என்று கூறி மிரட்டி உள்ளார். அடுத்த சில நாட்களில், வக்கீல் என்று கூறி ஒருவர் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டார். 'உங்களால் ஜோதிடர் விஜயகுமார் தற்கொலை செய்யும் முடிவில் இருக்கிறார்' என்று கூறி அச்சுறுத்தினார்.
பயந்து போன அந்தப் பெண், உடனடியாக பெங்களூரு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இப்போது, இளம் பெண்ணிடம் பணம் பறித்த போலி ஜோதிடரை தேடி வருகின்றனர்.