வங்க மொழி பேசினால் வங்கதேசத்தினரா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
வங்க மொழி பேசினால் வங்கதேசத்தினரா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
ADDED : ஆக 30, 2025 05:35 AM

'வங்க மொழி பேசுகின்றனர் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை வங்கதேசத்தினராக கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் வங்க மொழி பேசக்கூடிய பலரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறி நாடு கடத்தப்படுவதாகவும், இதற்கு எதிரான உத்தரவை பிறப்பிக்கக் கோரி மேற்கு வங்க புலம்பெயர் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணை இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த், ஜாய்மாலியா பக் ஷி மற்றும் விபுல் பஞ்சோலி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதி ஜாய்மாலியா பக் ஷி , ''ஒருவர் என்ன மொழி பேசுகிறார் என்பதை அடிப்படையாக வைத்து, அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என எப்படி முடிவுக்கு வருகிறீர்கள்? ஒருவர் பேசக்கூடிய மொழி என்பது அவருடைய குடியுரிமையை நிர்ண யம் செய்வதாக இருக்கக் கூடாது,'' என்றார்.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வாதிடுகையில், ''மேற்குவங்க மாநிலத்தில் எல்லையோரங்களில் வசிக்கக்கூடிய மக்கள் பலரும் எல்லை பாதுகாப்பு படையினரால் வலுக்கட்டாயமாக வங்கதேசத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
''அவர்கள் வங்க மொழி பேசுகின்றனர் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்களை அதிகாரிகள் வங்கதேசத்தவர்களாக கருதுகின்றனர்,'' என்றார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''தனி நபர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றால், அவர்கள் நீதிமன்றத்திற்கு வரட்டும். அதைவிடுத்து, இந்த அமைப்பு எதற்காக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்தியா சட்டவிரோத குடியேறிகளை ஏற்றுக் கொள்ளும் தலைநகரம் கிடையாது.
''சட்டவிரோத குடியேறிகள் இந்தியாவின் வளங்களை உறிஞ்சி கொழுப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது,'' என, வாதிட்டார்.
கோரிக்கை மேலும், 'சட்ட விரோத குடியேறிகள் தொடர்பான மற்ற வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவற்றுடன் சேர்த்து இதை விசாரிக்க வேண்டும்' என, கோரிக்கை வைத்தார்.
இதை தொடர்ந்து, வங்கதேச குடியேறிகள் விவகாரத்தில் மத்திய அரசு தனியாக பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.
-டில்லி சிறப்பு நிருபர்-