அலங்கார ஊர்தி புறக்கணிப்பா? ராணுவ அமைச்சகம் விளக்கம்!
அலங்கார ஊர்தி புறக்கணிப்பா? ராணுவ அமைச்சகம் விளக்கம்!
ADDED : ஜன 01, 2024 03:46 AM
சண்டிகர் : தலைநகர் புதுடில்லியில் குடியரசு தின விழா அலங்கார ஊர்தி அணிவகுப்பில் பாரபட்சம் காட்டப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
புதுடில்லியில் வரும் 26ம் தேதி குடியரசு தினவிழா அணிவகுப்பு கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழாவின் ஒரு பகுதி யாக, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும்.
குற்றச்சாட்டு
இந்தாண்டுக்கான தேர்வில், மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் புதுடில்லி மாநிலங்களின் அலங்கார ஊர்திகளை தேர்வுக்குழு நிராகரித்துள்ளது.
அரசியல் காரணங்களுக்காகவே தங்களது அரசுகளின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டதாக, எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு ராணுவ அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: அணிவகுப்பில் எந்தெந்த மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெற வேண்டும் என்பதை, மத்திய அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தேர்வுக்குழு முடிவு செய்யும்.
பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய இக்குழு ஆய்வு செய்து அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளை தேர்வு செய்யும்.
இதில் பஞ்சாப் அரசின் அலங்கார ஊர்தி, முதல் மூன்று சுற்றுகளின் ஆய்வுக்கு தேர்வுக்குழு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. எனினும், அடுத்த சுற்றுக்கான தேர்வில், நிபுணர் குழுவின் விருப்பத்தை பூர்த்தி செய்யாததால் இந்த ஆண்டுக்கான அலங்கார ஊர்தி தேர்வில் பஞ்சாப் மாநில அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்படவில்லை.
இதேபோல் மேற்கு வங்கத்தின் அலங்கார ஊர்தியும், தேர்வுக் குழுவின் எதிர்பார்ப்புகளை பூர்த்திச் செய்யாததால் இரண்டாம் சுற்றுடன் வெளியேறியது. இதே நிலை தான், புதுடில்லி அரசுக்கும் ஏற்பட்டு உள்ளது.
குடியரசு தின விழா அணிவகுப்பில், ஆண்டுதோறும் சிறந்த 15 முதல் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.
விமர்சனம்
முன்னதாக, மத்திய அரசுடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, 2024ம் ஆண்டு துவங்கி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நடைபெறும் அணிவகுப்பில், ஏதேனும் ஒரு நிகழ்வில் பங்கேற்க, பஞ்சாப் மற்றும் புதுடில்லி அரசுகள் ஒப்புக்கொண்டன.
இதன்படி, 2024ம் ஆண்டுக்கான அலங்கார ஊர்தி அணிவகுப்பு நிகழ்வில் தேர்வு செய்யப்படாதது குறித்து விமர்சிப்பது ஏற்கத்தக்கது அல்ல. அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு, சமமாக தான் பார்க்கிறது.
மூன்று ஆண்டுகளுக்குள் சுழற்சி முறையில் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இடம்பெற செய்வதே மத்திய அரசின் நோக்கம்.
எனவே, மாநிலங்களின் இடையே பாகுபாடு பார்க்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.