ADDED : ஜன 14, 2025 12:45 AM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தின் கரக்பூரில், ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, கோல்கட்டாவைச் சேர்ந்த ஷான் மாலிக், 21, மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
விடுதியில் தங்கியிருந்த இவருக்கு, ஞாயிறு தோறும் அவரது பெற்றோர் வீட்டு உணவு சமைத்து எடுத்து வருவது வழக்கம்.
இதுபோல் ஷானை பார்க்க, நேற்று முன்தினம் அவரது பெற்றோர் வீட்டு உணவுடன் அவரது விடுதிக்கு வந்தனர். ஷானின் மொபைல் போன் எண்ணிற்கு பலமுறை தொடர்பு கொண்ட போதும், அவர்களின் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஷானின் பெற்றோர், உடனே கல்லுாரி விடுதி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
இதையடுத்து, ஷானின் அறைக்கு சென்றனர். அங்கு அறை கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டதால், அதை உடைத்து திறந்து பார்த்தபோது, அறையின் ஜன்னல் இரும்பு கம்பியில் ஷான் துாக்கிட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே, அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில், ஷான் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

