சட்ட விரோத பதுங்கு குழிகள் மணிப்பூர் எல்லையில் அழிப்பு
சட்ட விரோத பதுங்கு குழிகள் மணிப்பூர் எல்லையில் அழிப்பு
ADDED : ஏப் 13, 2026 12:33 AM
இம்பால்: மணிப்பூரில் சட்ட விரோதமாக இயங்கிய 21 பதுங்கு குழிகளை அழித்த எல்லை பாதுகாப்பு படையினர், வெடி பொருட்களையும் கைப்பற்றினர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், மெய்டி மற்றும் கூகி இனத்தவருக்கு இடையே, 2023 மே மாதம் மோதல் வெடித்தது. ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த சண்டையில், 260 பேர் கொல்லப்பட்டனர். மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கையால் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், ஆயுதம் ஏந்திய குழுக்கள் பல்வேறு இடங்களில் கலவரத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், தெங்நவுபோல் மாவட்டத்தில் உள்ள மோங்கோட் சேப்பு என்ற கிராமத்தில், பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் மீது மர்ம நபர்கள் சமீபத்தில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அவர் உயிரிழந்தார். இதனால் அந்த மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, மாவட்டம் முழுதும் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், சிகிபுங்க் கிராமத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த, 14 பதுங்கு குழிகளை நம் வீரர்கள் அழித்தனர். அதேபோல், மோங்கோட் சேப்பு கிராமத்தில் இருந்த ஏழு பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன. இந்த பதுங்கு குழிகள், ஆயுதமேந்திய குழுக்களால் நடத்தப்பட்டவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
தெங்நவுபால் மாவட்டத்தில் உள்ள மோரே பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்து குவியல்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். இரண்டு கைத் துப்பாக்கிகள், சக்திவாய்ந்த வெடி பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
