சட்ட விரோத சாய பட்டறைகள் 'ட்ரோன்' மூலம் கண்காணிப்பு
சட்ட விரோத சாய பட்டறைகள் 'ட்ரோன்' மூலம் கண்காணிப்பு
ADDED : பிப் 27, 2026 02:18 AM
புதுடில்லி:மேற்கு டில்லி பகுதியில் செயல்பட்டு வரும், சட்ட விரோத சாயப்பட்டறைகளை, எம்.சி.டி., எனும், டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள், 'ட்ரோன்' கேமராக்கள் வாயிலாக கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில், 11 சாயப்பட்டறைகளை மூடி, 'சீல்' வைத்துள்ளனர்.
கடந்த, 16 - 20ம் தேதிகளில், டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள், வான்வழி ஆய்வு நடத்தினர்.
கையாலா, விஷ்ணு கார்டன், ரன்ஹோலா, பாப்ரோலா மற்றும் பிந்தாபூர் பகுதிகளில், ட்ரோன் எனும் ஆளில்லா விமானங்களில், கேமரா பொருத்தி, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அந்த பகுதியில், அரசு அனுமதியுடன் சில, ஜீன்ஸ் பேன்ட்களுக்கு, சாயமேற்றும் தொழிற்சாலை செயல்பட்டு வருகையில், பல சட்ட விரோதமாக செயல்பட்டது கண்டறியப்பட்டது.
அதையடுத்து, அந்த பகுதியில் உள்ள நீர் நிலைகளை மாசுபடுத்தி வந்த, 11 சாயப்பட்டறைகளை இழுத்து மூடிய அதிகாரிகள், சீல் வைத்துள்ளனர். இவ்வாறு, கடந்த, மூன்று மாதங்களில், இதுபோன்ற, 88 சட்ட விரோத சாயமேற்றும் பட்டறைகள் மூடப்பட்டுள்ளன.
இதற்கான நடவடிக்கையில், டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகளுடன், துணை கலெக்டர்கள், டில்லி மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், போலீசார் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் இணைந்து செயலப்பட்டனர்.
ஆளில்லா விமானங்கள் வாயிலாக நடந்த இந்த சோதனையில், மறைவான இடங்களில், பல சாயப்பட்டறைகள் சட்ட விரோதமாக செயல்பட்டது கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த முறையை தொடர்ந்து, அதிகாரிகள் பின்பற்றி வருகின்றனர்.

