சட்டவிரோத அடுக்குமாடி குடியிருப்புகள்... அதிகரிப்பு! கண்டுகொள்ளாத பெங்களூரு அதிகாரிகள்
சட்டவிரோத அடுக்குமாடி குடியிருப்புகள்... அதிகரிப்பு! கண்டுகொள்ளாத பெங்களூரு அதிகாரிகள்
ADDED : பிப் 15, 2024 04:36 AM
பெங்களூரு: பெங்களூரின், ஹுலிமங்களாவில் சட்டவிரோத அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரிக்கின்றன. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெங்களூரின் பல்வேறு இடங்களில், தனியார் கட்டுமான நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டியுள்ளனர். சிலர் முறைப்படி அனுமதி பெற்று, விதிமுறைகளுக்கு உட்பட்டு, குடியிருப்புகள் கட்டுகின்றனர். ஆனால், பலர் சட்டவிரோதமாக கட்டுகின்றனர்.
பெங்களூரு தெற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, ஹுலிமங்களாவின், ஷிகாரி பாளையா சுற்றுப்பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றில் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சியிடம் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து, முறைப்படி அனுமதி பெறவில்லை.
பல அடுக்குமாடி குடியிருப்புகளில், கழிவு நீர் சுத்திகரிப்பு டேங்க் பொருத்தப்படவில்லை. குடியிருப்புகளில் உற்பத்தியாகும் கழிவு நீர், நேரடியாக சாக்கடைகளில் விடப்படுகிறது. சில குடியிருப்புகள் உள்ளாட்சியிடம் அனுமதி பெறவில்லை என்றாலும், பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இப்படி, 50க்கும் மேற்பட்ட பிளாட்டுகள் வைத்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், எந்த விதிமுறைகளையும் பின்பற்றாததால், அரசு கருவூலத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது தெரிந்தும், உள்ளாட்சி அதிகாரிகள் மவுனமாக அமர்ந்துள்ளதாக, பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். '30க்கு 40 அடி அளவுள்ள சிறிய வீடுகள், விதிமுறைகளை மீறியிருந்தால், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் சட்டவிரோதமாக கட்டப்பட்ட, வானுயர்ந்த அடுக்குமாடி கட்டடங்களை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
'ஏழைகள், நடுத்தர வர்க்கத்து மக்கள் சிறிய வீடுகள் கட்ட, வரைபடத்துக்கு அனுமதி பெற படாதபாடு படுகின்றனர். ஆனால், செல்வந்தர்கள் கட்டும் அடுக்குமாடி கட்டடங்களுக்கு, அனுமதி கிடைப்பது எப்படி. பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், ஏழைகளுக்கு ஒரு சட்டமா' என, கேள்வி எழுப்புகின்றனர்.
விதிமீறலாக கட்டப்பட்டவை என்பது தெரியாமல், பொது மக்கள் இத்தகைய அடுக்குமாடி குடியிருப்புகளில், லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்து, பிளாட் வாங்குகின்றனர்.
அதன்பின் சட்டவிரோதமாக கட்டப்பட்டது வெளிச்சத்துக்கு வந்து, அவதிப்படுகின்றனர். பணத்தையும் இழக்கின்றனர். வீடுகளையும் பறிகொடுக்கின்றனர். தாங்கள் செய்யாத தவறுக்கு, தண்டனை அனுபவிக்கின்றனர்.
ஹுலிமங்களா மட்டுமின்றி, பெங்களூரின் பல்வேறு இடங்களில், இத்தகைய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன, இதை கட்டுப்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கட்டுமான நிறுவனங்களுடன் ஒத்துழைத்து, சட்டவிரோத கட்டடங்கள் அதிகரிக்க காரணமாகின்றனர்.
'இனியாவது மாவட்ட நிர்வாகம், சட்டவிரோத கட்டடங்களை ஆய்வு செய்து, ஆவணங்களை சோதனையிட வேண்டும். தவறு செய்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். தயவு, தாட்சண்யமின்றி இத்தகைய கட்டடங்களை இடித்து தள்ள வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இது தொடர்பாக, ஹுலிமங்களா கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி கிருஷ்ணப்பா கூறியதாவது:
கழிவுநீர் சுத்திகரிப்பு டேங்க் கட்டாமல், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது, எங்களின் கவனத்துக்கு வரவில்லை. சில இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவு நீர், சாக்கடைகளில் பாய்வதாக தகவல் கிடைத்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளை, ஆய்வு செய்வோம். முறைப்படி அனுமதி பெறாமல் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

