ADDED : ஜூலை 13, 2025 03:23 AM

ஒடிஷாவில் முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரமடைந்து உள்ளது.
சமீபத்தில், ஜார்சுகுடா மாவட்டத்தில் சட்டவிரோதமாக குடியேறியதாகக் கூறி, 444க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
அடைக்கலம்
அவர்களில் பெரும்பாலானோர், 'பெங்காலி' மொழி பேசும் ரிக்ஷாக்காரர்கள், கட்டட வேலை செய்வோர் மற்றும் சிறிய வியாபாரிகள்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர்கள், பிழைப்புக்காக ஒடிஷாவின் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களிடம் ஆதார், ரேஷன் கார்டுகள் இருந்தும் போலீசார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரம், ஒடிஷா - மேற்கு வங்க அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்துடன், மேற்கு வங்கம் 2,217 கி.மீ., துாரத்துக்கு எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
இதன் வழியாக, வங்கதேசத்தவர் சட்டவிரோதமாக நம் நாட்டுக்குள் ஊடுருவுகின்றனர்.
அவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, அடைக்கலம் கொடுப்பதாக பா.ஜ., குற்றஞ்சாட்டுகிறது.
மேலும், அவர்களுக்கு போலியாக ஆதார், ரேஷன் உள்ளிட்ட அடையாள அட்டைகள் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
கடும் கண்டனம்
இப்படி மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர், அண்டை மாநிலமான ஒடிஷாவின் பல்வேறு இடங்களில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர்.
ஒடிஷாவில் பல ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம், இந்த விவகாரத்தை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
அங்கு, 2024ல் ஆட்சிக்கு வந்த பா.ஜ., இதற்கு முக்கியத்துவம் கொடுத்து, சட்ட விரோதமாக குடியேறியவர்களை களையெடுக்கும் பணியை துவங்கி உள்ளது.
இதன்படி, ஜார்சுகுடா மாவட்டத்தில், 400க்கும் மேற்பட்டோரை ஒடிஷா போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்., நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அக்கட்சியின் லோக்சபா எம்.பி., மஹுவா மொய்த்ரா கூறுகையில், “ஒடிஷா போலீசாரின் நடவடிக்கை சட்டவிரோதமானது. கைதான நபர்களிடம், முறையான அனைத்து ஆவணங்களும் இருந்தன.
''எனினும், அவர்கள் பெங்காலி பேசுகின்றனர் என்ற ஒரேயொரு காரணத்திற்காகவே கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த நாட்டில் எங்கும் வாழவும், வேலை செய்யவும் அரசியலமைப்பு உரிமை உண்டு,” என்றார்.
இதற்கு பதிலளித்த ஒடிஷா போலீசார், 'சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முறையான ஆவணங்கள் இருந்தால் சரிபார்ப்புக்கு பின் அனுப்பி விடுவோம். இதை அரசியலாக்க வேண்டாம்' என்றனர்.
எதிர்பார்ப்பு
ஒடிஷாவில் துவங்கிய இந்த நடவடிக்கை, பா.ஜ., ஆளும் பிற மாநிலங்களான டில்லி, மத்திய பிரதேசம், குஜராத்திலும் எதிரொலித்துள்ளது.
இது, மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதை, அக்கட்சி எப்படி சமாளிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
- நமது சிறப்பு நிருபர் -.