சட்டவிரோத குடியேற்றம்: டில்லிக்கு ஆபத்து ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
சட்டவிரோத குடியேற்றம்: டில்லிக்கு ஆபத்து ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
ADDED : பிப் 04, 2025 02:51 AM

புதுடில்லி: வங்கதேசத்தினர், மியான்மர் ரோஹிங்கியாக்களின் சட்டவிரோத குடியேற்றத்தால் டில்லியின் சமூக, பொருளாதார, அரசியல் நிலைமையே முற்றிலும் மாறியுள்ளதாக ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை சார்பில், டில்லி குறித்த 114 பக்க ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சட்டவிரோத குடியேறிகளால் டில்லியின் உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தில் பலத்த தாக்கம் ஏற்பட்டுள்ளது. போலி அடையாள ஆவணங்களால் சட்ட ரீதியான அலுவல்கள் மற்றும் தேர்தல் நடைமுறைகளில் கடும் விளைவுகள் உண்டாகி உள்ளன.
பூகோள ரீதியாகவும் டில்லியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்களால் வேற்று நாட்டவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2017ம் ஆண்டு ரோஹிங்கியா விவகாரத்துக்கு பின், கணிசமான அளவுக்கு அவர்களது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இவர்களில், ஏராளமானோர் டில்லியில் நிரந்தரமாக தங்கி விட்டனர்.
சட்டவிரோத குடியேற்றத்தின் விளைவாக அதிக நெரிசல், எந்தவித திட்டமும் இல்லாமல் விரிவாகும் நகரப்பகுதி ஆகியவற்றோடு குடிநீர், மின்சாரம், கல்வி, சுகாதாரம் போன்ற பொது சேவைகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது.
சட்ட விரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், டில்லியில் குடிசைப் பகுதிகள் அதிகரித்து வருவதுடன், நகரின் உட்கட்டமைப்பில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. கட்டுமானம், வீட்டு வேலை போன்ற வேலைகளை பார்க்கும் பூர்விக தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது.
ரோஹிங்கியா உள்ளிட்ட குடியேறிகளுக்கு சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி போன்ற சலுகைகளை டில்லி அரசு அளிப்பதால் சட்டவிரோத குடியேற்றம் அதிகரிக்கிறது.
சட்டவிரோத குடியேற்றத்தால் சமூக, பொருளாதார பாதிப்புகள் மட்டுமின்றி போலி ஆவணங்கள், ஆள் கடத்தல் போன்ற கிரிமினல் நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

