வங்கதேசத்தினர் சட்டவிரோத ஊடுருவல்; ஜார்க்கண்டில் அமலாக்கத்துறை சோதனை
வங்கதேசத்தினர் சட்டவிரோத ஊடுருவல்; ஜார்க்கண்டில் அமலாக்கத்துறை சோதனை
ADDED : நவ 13, 2024 03:37 AM

ராஞ்சி : வங்கதேசத்தினரின் சட்டவிரோத ஊடுருவல் குறித்த விஷயத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, ஜார்க்கண்டின் பல்வேறு பகுதிகளில் அமலாக்க துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இதில், போலி ஆதார் அட்டைகள், ஆயுதங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
சட்டவிரோத ஊடுருவல்
இம்மாநில சட்டசபைக்கு இன்றும், வரும் 20ம் தேதியும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்குள் சட்டவிரோத ஊடுருவல் அதிகரித்து இருப்பதாகவும், அவர்கள் பழங்குடியினரின் நிலங்களை அபகரிப்பதாகவும் பா.ஜ., குற்றஞ்சாட்டி வருகிறது.
இதனால், சந்தால் பர்கானா மற்றும் கோல்ஹான் மாவட்டங்களில் பழங்குடியினரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக, தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மாநில அரசின் ஆதரவுடன் இந்த சட்டவிரோத ஊடுருவல் நடப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், ஊடுருவல்காரர்களை கண்டறிந்து அவர்கள் அபகரித்த நிலங்களை மீட்க சிறப்பு குழு அமைக்கப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் தெரிவித்தார்.
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவிய பெண், ராஞ்சியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை அளித்தார். அதில், அழகு நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவித்து இருந்தார்.
பணப்பரிமாற்றம்
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஆறு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
அதில் ஒருவரிடம் இருந்து போலி ஆதார் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சட்டவிரோத ஊடுருவல் மற்றும் ஆள் கடத்தல் தொடர்பாக, பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இதில் சம்பந்தப்பட்ட பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்க துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 17 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், போலி ஆதார் அட்டைகள், ஆயுதங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜார்க்கண்டின் 43 தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், அமலாக்கத்துறை சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.