சட்டவிரோதமாக நடக்கும் மணல் கொள்ளை; தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு நோட்டீஸ்
சட்டவிரோதமாக நடக்கும் மணல் கொள்ளை; தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு நோட்டீஸ்
ADDED : டிச 05, 2024 02:07 AM

புதுடில்லி: 'எந்த ஒரு சுற்றுச்சூழல் அனுமதியும் பெறாமல், சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடப்பது என்பது மிகவும் தீவிரமான பிரச்னை. இதில் கடுமையான, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்கள் விரிவான, முழு தகவல்களுடன் கூடிய அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த எம்.அழகர்சாமி என்பவர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம், பஞ்சாப், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்த அவர் கோரியுள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டின் பல மாநிலங்களில் ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும், சட்டவிரோதமாக மணல் கொள்ளையடிக்கப் படுகிறது. குறிப்பாக, தமிழகம், பஞ்சாப், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களில் இந்தப் பிரச்னை மிகவும் தீவிரமாக உள்ளது.
நடவடிக்கை
இந்த மணல் கொள்ளை, சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அரசு நிர்வாகத்தின் உரிய அனுமதி இன்றி, லைசென்ஸ் அளவைத் தாண்டி இவ்வாறு நடக்கும் கொள்ளையை அரசு நிர்வாகங்கள் கண்டுகொள்ளாமல் உள்ளன.
மாநில அரசுகளின் உரிய விதிமுறைகள் இல்லாததால், மணல் கொள்ளை மிகப்பெரிய மோசடியாக மாறியுள்ளது. இது சுற்றுச்சூழல் பாதிப்புடன், குடிமக்களின் உரிமையையும் பறிப்பதாக உள்ளது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் இல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள் இல்லாமல், பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல், இதுபோன்ற மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது.
இதுவரை நடந்துள்ள மணல் கொள்ளைகள் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மணல் கொள்ளையில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த சட்டவிரோத மணல் கொள்ளையால், சட்டம் -- ஒழுங்கு பிரச்னைகளும், மாபியாக்களின் கொட்டமும் ஏற்படுகிறது. இதையெல்லாம்விட அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
குறிப்பிட்ட அளவுக்கு லைசென்ஸ் பெற்று, மணல் கொள்ளையில் ஈடுபட்டோருக்கு வழங்கப்பட்ட அந்த லைசென்ஸ் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
பதில் மனு
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் அவர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வாதிட்டதாவது:
இந்த வழக்கு, 2018ல் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய அரசு, சி.பி.ஐ., மற்றும் ஐந்து மாநிலங்களுக்கு, 2019ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை, பதில் தாக்கல் செய்யப்படவில்லை.
சுற்றுச்சூழலுடன் பொதுமக்களின் நலன்கள் பாதிக்கப்படுவதுடன், அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்பதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதையடுத்து, அமர்வு கூறியுள்ளதாவது:
சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடப்பது என்பது மிகவும் தீவிரமான பிரச்னை.
இந்த கொள்ளையை தடுப்பதில் மாநில அரசுகள், கடுமையான உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதுவரை இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக, விரிவான பதில் மனுவை, தகுந்த புள்ளி விபரங்களுடன் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்துள்ள உத்தரவு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதா என்பது குறித்து ஆராயப்படும்.
கேள்விகள்
மணல் குவாரிகள் நடத்துவதற்கு, சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படுகிறதா? சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் உட்பட மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபந்தனைகள், இந்த மணல் குவாரிகளுக்கு பொருந்துமா? அவ்வாறு பொருந்தும் என்றால், அதற்கான நிபந்தனைகள் என்ன? இவ்வாறு அனைத்துத் தகவல்களையும், பதில் மனுவில் மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணை, அடுத்தாண்டு, ஜன., 27ம் தேதி துவங்கும் வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.