சட்டவிரோதமாக 'ஏ காத்தா' : நடவடிக்கை எடுக்க தயக்கம்
சட்டவிரோதமாக 'ஏ காத்தா' : நடவடிக்கை எடுக்க தயக்கம்
ADDED : அக் 09, 2024 10:52 PM
பெங்களூரு : பெங்களூரில் 45,000க்கும் மேற்பட்ட சொத்துகளுக்கு, சட்டவிரோதமாக, 'ஏ காத்தா' அளித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ஓராண்டு கடந்தும், மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொழில்நுட்பம்
பெங்களூரில் 'பி' காத்தா எனும் பட்டா அளிக்க தகுதியான சொத்துகளுக்கு, கட்டணம் வசூலித்து கொண்டு, சட்டவிரோதமாக 'ஏ' காத்தா அளித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக, அன்றைய நிதி பிரிவு சிறப்பு கமிஷனர் ஜெயராம் ராயபுரா, விசாரணை நடத்தினார். 45,000க்கும் மேற்பட்ட சொத்துகளுக்கு, 'ஏ காத்தா' அளித்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக, மாநகராட்சி நிர்வாகத்துக்கு அறிக்கை அளித்தார். குடிசைப்பகுதி உட்பட, பல்வேறு பகுதிகளில் சொத்து உரிமையாளர்களிடம் கட்டணம் வசூலித்து, 'ஆர் கோட் - 130' தொழில்நுட்பம் பயன்படுத்தி ஏ காத்தா அளித்துள்ளனர்.
நில பரிமாற்றம் செய்யப்படாத மனைகளுக்கு, மேம்பாட்டு கட்டணம் வசூலிக்க கூடாது. இத்தகைய சொத்துகளுக்கு பி காத்தா அளிக்க வேண்டும்.
ஆனால் சட்டவிரோதமாக ஏ காத்தா அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அறிக்கையில் சிபாரிசு செய்திருந்தார்.
சட்டவிரோதமாக ஏ காத்தா பெற, மேம்பாட்டு கட்டணம் செலுத்திய மனைகளின் உரிமையாளர்கள், தவறை ஒப்புக்கொண்டால் அவர்கள் செலுத்திய கட்டணம் திருப்பி தரப்படும். இல்லையென்றால் அந்த தொகை, மாநகராட்சியில் வைக்கப்படும். சட்டவிரோத ஏ காத்தாக்களை ரத்து செய்து, அனைத்து சொத்துகளும் பி காத்தாவில் சேர்க்கப்படும் என, கூறப்பட்டது.
இடமாற்றம்
இதற்கிடையே ஜெயராம் ராயபுரா இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பின் வருவாய்ப்பிரிவு சிறப்பு கமிஷனர் முனீஷ் மவுத்கில் தலைமையில் கமிட்டி அமைத்து, சட்டவிரோதமாக ஏ காத்தா பெற்றிருப்பது குறித்து, நடவடிக்கை எடுக்கும்படி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் உத்தரவிட்டார். உத்தரவிட்டு ஓராண்டுக்கு மேலாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வருவாய்ப்பிரிவு கமிஷனர் முனீஷ் மவுத்கில் கூறியதாவது:
சட்டவிரோதமாக ஏ காத்தா பெற்றது குறித்து, ஏற்கனவே விசாரணை நடந்துள்ளது. இந்த முறைகேட்டில் யார், யாருக்கு தொடர்புள்ளது என்பது குறித்து, முந்தைய சிறப்பு கமிஷனர் ஜெயராம் ராயபுரா அறிக்கை அளித்துள்ளார். அதன்படி மண்டல கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசாரணைக்கு புதிய கமிட்டி அமைக்கப்பட்டாலும், விசாரிக்க புதிதாக எதுவும் இல்லை. எனவே முந்தைய உத்தரவுபடியே, மண்டல கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது பற்றி அவருக்கு மீண்டும் நினைவூட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.