வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது: நவீன் பட்நாயக் பதில்
வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது: நவீன் பட்நாயக் பதில்
UPDATED : மே 30, 2024 04:09 PM
ADDED : மே 30, 2024 03:16 PM

புவனேஸ்வர்: ‛‛ நான் முழு உடல்நலத்துடன் உள்ளேன்'' என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார். மேலும், 'வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு கிடையாது' என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒடிசாவில் நேற்று( மே 30) நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசும் போது, ‛‛ முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை மோசமாக உள்ளதன் காரணம் என்ன? இது குறித்து மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி அமைத்த உடன் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் '' எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு நவீன் பட்நாயக் அளித்த பேட்டியில் கூறியதாவது: எனது உடல்நிலை குறித்து பிரதமர் மோடி கவலைப்படுகிறார். சமீபத்தில் என்னை அவரது நண்பர் என கூறியிருந்தார். அப்படி இருக்கையில், தொலைபேசியில் என்னை அழைத்து எனது உடல்நிலை குறித்து கேட்டு இருக்கலாம். ஆனால், இதற்கு மாறாக பொது மேடையில் 3 முறை சத்தமாக எனது உடல்நிலை குறித்து பேசுகிறார். தேர்தல் நேரம் என்பதால், அனைத்தையும் அரசியல் லாபத்திற்காக செய்கிறார். எனது உடல்நிலை சரியாக உள்ளது. கடந்த மாதம், மாநிலம் முழுவதும் சென்று பிரசாரம் செய்தேன். எனது உடல்நிலை குறித்த வதந்தியை 10 ஆண்டுகளாக பா.ஜ.,வினர் பரப்பி வருகின்றனர். எனது உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்லை. நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், முதல்வருக்கு பதிலாக விகே பாண்டியன் அனைத்து முடிவுகளும் எடுப்பதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு நவீன் பட்நாயக் கூறியதாவது: இது முட்டாள் தனமான குற்றச்சாட்டு. பழையது என முன்னரும் சொல்லி உள்ளேன். இதற்கு மேலும், இது பற்றி பேசுவதில் எந்த பலனும் இல்லை. இவ்வாறு நவீன் பட்நாயக் கூறினார்.
வி.கே.பாண்டியன்
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும் தமிழருமான வி.கே.பாண்டியன், நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக இருப்பதாக பா.ஜ., விமர்சிப்பது குறித்த கேள்விக்கு நவீன் பட்நாயக் அளித்த பதில்: வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது. ஒடிசா மக்கள் தான் பிஜூ ஜனதா தளத்தின் எதிர்காலத் தலைவர் யார் என்பதை தீர்மானிப்பார்கள். இவ்வாறு அவர் பதிலளித்தார்.