நான் இன்னும் பொறுப்பில் தான் இருக்கிறேன்: குறுக்குபுத்தி வழக்கறிஞர் மீது சந்திரசூட் காட்டம்
நான் இன்னும் பொறுப்பில் தான் இருக்கிறேன்: குறுக்குபுத்தி வழக்கறிஞர் மீது சந்திரசூட் காட்டம்
ADDED : அக் 04, 2024 01:41 AM

புதுடெல்லி: நான் பிறப்பித்த உத்தரவு விவரங்களை குறுக்கு வழியில் கோர்ட் மாஸ்டரிடம் ஆய்வு செய்ய உனக்கு என்ன துணிச்சல் என வழக்கறிஞர் ஒருவரை சகட்டு மேனிக்கு திட்டிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் , நான் இன்னும் பொறுப்பில் தான் உள்ளேன் எனவும் அவரை கடிந்து கொண்டார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் கடந்த 2022 நவம்பரில் பதவியேற்றார். வரும் 10-ம் தேதி பணி நிறைவு பெறுகிறார்.
தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கின் விசாரணையின் போது , உரத்த குரலில் வாதாடிய வழக்கறிஞரை இது கோர்ட் ஹால், என்ன பார்த்து கத்தாதீங்க என்றார். கடந்த சில தினங்களுக்கு முன் வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் யா...யா.. என ஆங்கிலத்தில் உச்சரித்தார். உடனே கோபமடைந்த சந்திரசூட் ''அது என்ன, யா யா? இது என்ன காப்பி கடையா? இந்த வார்த்தையை கேட்டாலே அலர்ஜியாக உள்ளது என்றார்.
இந்நிலையில் தாம் பணி நிறைவு பெறுவதையொட்டி தான் பிறப்பித்த உத்தரவு விவரங்களை கோர்ட் மாஸ்டருக்கு அனுப்பினார். அதனை வழக்கறிஞர் ஒருவர் குறுக்கு வழியில் ஆய்வு செய்ய முயற்சித்தார்.
இதையறிந்த சந்திரசூட், அந்த வழக்கறிஞரை அழைத்து நான் பிறப்பித்த உத்தரவு விவரங்களை கோர்ட் மாஸ்டரிடம் ஆய்வு செய்ய உனக்கு என்ன துணிச்சல், நாளை என் வீட்டிற்கு வந்து நான் என்ன செய்கிறேன் என எனது தனி செயலாளரிடம் கேட்பீர்களா ? வழக்கறிஞர்கள் எல்லாம் என்ன புத்தி இழந்துவிட்டார்களா ? கொஞ்ச காலம் என்றாலும் நான் இன்னும் பொறுப்பில் தான் இருக்கிறேன் என்றார்.
இந்நிலையில் சந்திரசூட் பணி நிறைவு அடைவதையெடுத்து சட்டப்பூர்வ பதவிக்கான அடுத்த வரிசையில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா உள்ளார்.