இமாம்களுக்கு 17 மாத சம்பள பாக்கி டில்லியில் கெஜ்ரிவால் வீடு முற்றுகை
இமாம்களுக்கு 17 மாத சம்பள பாக்கி டில்லியில் கெஜ்ரிவால் வீடு முற்றுகை
ADDED : டிச 27, 2024 02:12 AM
புதுடில்லி, கடந்த 17 மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்ட டில்லி வக்பு வாரிய இமாம்கள், 'சம்பளம் வழங்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என எச்சரித்துள்ளனர்.
இஸ்லாமியர்கள் தங்கள் சொத்துக்களை, வக்பு பத்திரம் வாயிலாக இஸ்லாமிய மத வழிபாட்டு தலங்களுக்கு தானமாக கொடுக்கும் வழக்கம் உள்ளது.
குற்றச்சாட்டு
அவ்வாறு கொடுக்கப்படும் சொத்துக்கள், நிலங்களை பராமரிக்க, நிர்வகிக்க பொது மற்றும் தனியார் வக்பு வாரியங்கள் உள்ளன.
அவ்வாறு செயல்படும் டில்லி வக்பு வாரியத்தின் கீழ் வரும் மசூதிகளில் பணியாற்றும் இமாம் எனப்படும் மத குருமார்களுக்கு, பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பலமுறை முறையிட்டும், ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசு கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், அகில இந்திய இமாம் சங்க தலைவர் மவுலானா சாஜித் ரஷிதி தலைமையில் ஏராளமான இமாம்கள், டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை நேற்று முற்றுகையிட்டனர்.
அதன்பின், மவுலானா சாஜித் கூறியதாவது:
டில்லி வக்பு வாரியத்தில் செயல்படும் 240 இமாம்கள் மற்றும் முவாசின்களுக்கு, கடந்த 17 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. எங்களுக்கு 16,000 - 18,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மவுனம்
ஆனால், சரியான நேரத்தில் அது வழங்கப்படவில்லை. ஆம் ஆத்மி அரசு எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காக்கிறது.
முதல்வர் ஆதிஷி, துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா ஆகியோரையும் பார்த்து முறையிட்டோம்; உத்தரவாதங்கள் மட்டுமே கிடைத்தன.
ஆனால், சம்பளம் வரவில்லை. சம்பள விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துஉள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.