தென்மேற்கு பருவமழை தீவிரம்: மும்பைக்கு இரண்டு நாட்களுக்கு ரெட் அலெர்ட்
தென்மேற்கு பருவமழை தீவிரம்: மும்பைக்கு இரண்டு நாட்களுக்கு ரெட் அலெர்ட்
ADDED : ஜூலை 03, 2026 06:18 PM

மும்பை: மஹாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மும்பை, தானே உள்ளிட்ட நகரங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
மஹாராஷ்டிராவில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அஞ்கு பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. சாலைகளில் மரங்கள் விழுந்ததாலும், சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியதாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், மக்களும் அவதி அடைந்தனர். ஊழியர்கள் மீட்புப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.மும்பையில் நேற்று ஒருவர், மழைநீர் சூழ்ந்த சாலையில் பாதாள சாக்கடையில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதில் அலட்சியமாக செயல்பட்டதாக, மாநகராட்சி ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மும்பையில் நாளை ( ஜூலை 04) மற்றும் நாளை மறுநாள் ஒரு சில இடங்களில் அதிகனமழையும், சில இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளது. தானே, பல்ஹர் மற்றும் ராய்காட் மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
