கோடை மழை வெளுத்து வாங்க போகுதாம்! ஆனால் தமிழகத்திற்கு லேசான மழைதானாம்
கோடை மழை வெளுத்து வாங்க போகுதாம்! ஆனால் தமிழகத்திற்கு லேசான மழைதானாம்
UPDATED : ஏப் 28, 2024 09:26 AM
ADDED : ஏப் 28, 2024 08:35 AM

புதுடில்லி: கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் வாட்டி வதைக்கும் வகையில் மழை பெய்யாத என்ற எதிர்பார்ப்புக்கு தமிழகத்திற்கு லேசான ஆறுதல் மழை இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோடை மழை தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
இந்தியாவின் பல மாநிலங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வட மாநிலங்களான அருணாசல் பிரதேசம், நாகாலந்து, மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், சட்டீஸ்கர், தெற்கு ஒடிசாவில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உருவாகி உள்ளது. தமிழகத்தில் லேசான மழை மட்டும் பெய்யும். தெலுங்கானாவில் மிதமான மழை பெய்யும். மத்தியபிரேதசம், மஹாராஷ்ட்டிராவில் சில மாவட்டங்களில் கன மழை பெய்யும். சில இடங்களில் பலத்த காற்று வீசக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை குறைவு
மார்ச் 1 முதல் ஏப்ரல், 27 வரை, இயல்பாக 54.7 மி.மீ., மழை பெய்யும். இந்த ஆண்டு இதுவரை, 9.4 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவை விட 83 சதவீதம் குறைவு.
மார்ச் 1 முதல் நேற்று வரை, சென்னை, செங்கல்பட்டு, கடலுார், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருப்பூர், திருவண்ணாமலை, வேலுார், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஒரு மி.மீ., மழை கூட பெய்யவில்லை. அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில், 69.7 மி.மீ., மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி மாவட்டத்தில், 55.5; விருதுநகர் 31.7; நீலகிரி 30.7; தென்காசி 30; தேனி 22; மதுரை 16.8; துாத்துக்குடி 14.9; ராமநாதபுரம் 14.5 மி.மீ., மழை பெய்துள்ளது.

