இந்தியா எதிர்ப்பை மீறி ரூ.8,500 கோடி பாக்.,கிற்கு சர்வதேச நிதியம் வழங்கியது
இந்தியா எதிர்ப்பை மீறி ரூ.8,500 கோடி பாக்.,கிற்கு சர்வதேச நிதியம் வழங்கியது
ADDED : மே 11, 2025 02:30 AM
புதுடில்லி: மத்திய அரசின் கடும் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் 8,542 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளது.
இந்தியா - பாக்., நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், பாக்.,குக்கு எதிராக சர்வதேச ரீதியிலும் நம் நாடு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதன்படி பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியத்தில் இருந்து தற்போது அளிக்க இருந்த கடனை வழங்க எதிர்ப்பு தெரிவித்தது.
ஆய்வு கூட்டம்
ஏற்கனவே பாகிஸ்தானுக்கு, 59,800 கோடி ரூபாய் கடனை ஏழு தவணைகளாக வழங்க, சர்வதேச நிதியம் கடந்தாண்டு ஒப்புக்கொண்டது.
அதன்படி, தவணைத் தொகையை விடுவிப்பதற்காக, பஹல்காம் தாக்குதலுக்கு முன், கடந்த மார்ச் 25ல் பாக்., தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது.
அப்போது, உள்கட்டமைப்பு வசதி, மறுசீரமைப்புக்காக கடனுதவி கேட்பதாக பாக்., விளக்கம் அளித்தது. இந்நிலையில், கடன் தொகையை விடுவிப்பது தொடர்பான கூட்டம், வாஷிங்டனில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
அந்த கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை சுட்டிக்காட்டி இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது; ஓட்டெடுப்பையும் புறக்கணித்தது. பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி வழங்கும் பணம் அனைத்துமே எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்காகவே அந்நாடு செலவழிக்கிறது என்றும், பயங்கரவாதிகளுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு அந்த நிதியை பாக்., பயன்படுத்துகிறது என்றும், இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நம் மத்திய நிதி அமைச்சகம் சார்பில் அளித்த அறிக்கையையும் மீறி, பாக்.,குக்கு 8,542 கோடி ரூபாய் கடனுதவியை உடனடியாக விடுவிப்பதற்கு, துணை நிர்வாக இயக்குநர் நிகேல் கிளார்க்கி தலைமையில் நடந்த நிதியத்தின் வாரிய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், இயற்கை பேரிடர் போன்றவற்றுக்காக, 11,900 கோடி ரூபாய் நீண்டகால கடன் வழங்கும்படி, பாக்., விடுத்த கோரிக்கையையும் வாரியம் ஏற்றுக்கொண்டது.
பொருளாதாரம்
சர்வதேச நிதியத்தின் முடிவை வரவேற்ற பாக்., பிரதமர் ஷபாஸ் ஷெரீப், “இந்தியாவின் உச்சபட்ச ராஜதந்திரம் தோல்விஅடைந்து விட்டது. கடந்த 14 மாதங்களில் பாக்.,கின், பொருளாதாரம் மேம்பட்டு வரும் நிலையில், சர்வதேச நிதியத்தில், பாக்., பொருளாதாரம் பற்றிய இந்தியாவின் சதி முறியடிக்கப்பட்டது,” என குறிப்பிட்டுள்ளார்.