பாக்., தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா
பாக்., தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா
ADDED : மே 31, 2025 01:33 AM

பூஞ்ச்: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர்.
இதையடுத்து, கடந்த 7ம் தேதி அதிகாலை பாக்., மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்த பயங்கரவாதிகள் முகாம் மீது நம் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக, ஜம்மு - காஷ்மீர் உட்பட எல்லையை ஒட்டிய மாநிலங்களில் பாக்., ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பீரங்கி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர் உட்பட 28 பேர் கொல்லப்பட்டனர். வீடுகள், கடைகள் கடுமையாக சேதமடைந்தன.
இந்நிலையில், பாக்., தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தாக்குதலில் கடும் சேதமடைந்த குருத்வாரா சிங் சபையை ஆய்வு செய்தார்.
தாக்குதலுக்கு உள்ளான கடைகள், வீடுகளையும் பார்வையிட்டார். வீடுகள், உடைமைகளை இழந்த மக்களை சந்தித்து, அமித் ஷா ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த தாக்குதல் மிகவும் மோசமானது. சேதமடைந்த வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டு தலங்களுக்கு மத்திய அரசு விரைவில் நிவாரணம் வழங்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.